கடந்த இரு தினங்களாகவே விஜய்யின் ‘பிகில்’படம் குறித்து தொடர்ந்து நெகடிவ்வான செய்திகளே வெளியாகத் துவங்கியுள்ளநிலையில், இப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்துள்ள நடிகர் பிரித்விராஜ் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் மூன்று தினங்கள் வசூலில் சக்கைப் போடுபோட்ட பிகில் கார்த்தியின் கைதி படத்துக்கு முன் தோல்வி முகம் காணத் துவங்கியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் சரசரவென இறங்கியது.தமிழகத்தில் வெளியான அதே 25ம் தேதியன்று கேரளாவிலும் ரிலீஸான இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் பிருத்விராஜ் அங்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார். நடிகர் விஜய்க்கு அங்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளதால், இந்தப் படம் 200 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

கேரள சினிமா நடைமுறைகளின்படி, பிற மொழிப் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யும் போது, 125 தியேட்டர்களுக்கு மேல் திரையிடக் கூடாது என்று கேரள தியேட்டர் அதிபர்கள் சங்கம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இதை மீறி, நடிகர் பிரித்விராஜ் பிகில் படத்தை 200 ஸ்கிரீனுக்கு மேல் திரையிட்டுள்ளதால், தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடிகர் பிருத்விராஜ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதியை மீறியதால், பிகில்பட வசூலில் ஒரு பகுதியை சங்கத்துக்கு அபராதமாகக் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தவறினால் நடிகர் பிருத்விராஜின் படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. எதிர்பார்த்த அளவு வசூலும் இல்லாத நிலையில் இப்படி ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் பிரித்விராஜ்.