கொரோனா வைரஸால் உலக மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது ஈரான், இத்தாலி, அமெரிக்கா, இந்தியா என அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி வருகிறது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் மேலும் பரவலை தடுக்க தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், அருட்காட்சியகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் கேளிக்கை இடங்கள் மூடப்பட்டுள்ளன. மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங்குகளும் இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மலையாள நடிகர் பிரித்விராஜ் ஜோர்டான் நாட்டில் தனது ஆடுஜீவிதம் என்ற படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி வருவது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரித்விராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் பாதுகாப்பு மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப்போது ஜோர்டானில் உள்ள வாடி ரம் என்ற இடத்தில் ஷூட்டிங்கை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். கொரோனா பீதியால் இங்கிருந்து வெளிநாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. அதனால் எங்களிடம் இரண்டே வழி மட்டுமே இருந்தது. நாங்கள் உள்ள பாலைவன கூடாரத்திலேயே தொடர்ந்து தங்குவது, இல்லை ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்துவது.

இங்குள்ள அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம். விமானத்தில் வந்த 2 நடிகர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் இன்னும் 2 வாரங்கள் கழித்து எங்களுடன் வந்து இணைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்விராஜின் இந்த விளக்கமும் புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வெளிநாட்டில் ஷூட்டிங்கிற்காக வந்த சக நடிகர்களை பாதுகாக்க எண்ணாமல், உயிரை பணயம் வைத்து ஷூட்டிங்கை தொடர்வது சரியா? என கேள்விகள் எழுந்துள்ளன.