உலகையே உலுக்கியெடுத்து வரும் கொரோனாவால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. 

இதனால் மக்கள், வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நான் சேர்த்து வைத்துள்ள பணத்தை பார்த்தேன் எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள், எனது உதவியாளர்கள் ஆகிய அத்தனை பணியாளர்களுக்கும் மே மாதம் வரை சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன். தற்போதைய சூழ்நிலையில் நின்று போன எனது மூன்று படங்களிலும் வேலை பற்றி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தது பாதி சம்பளத்தை வழங்க முயற்சி செய்வேன்.

என்னால் முடிந்தவரை மேலும் உதவிகள் செய்வேன். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு முடிந்த உதவி தொகையை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் திரும்பி கொடுக்க வேண்டிய நேரமிது. ஒருவருடன் ஒருவர் ஆதரவாக இருப்போம்’’ என அவர் கூறியுள்ளார் இன்று பிறந்தநாள் காணும் பிரகாஷ்ராஜின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.