சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்காக பிரகாஷ் ராஜ் ஆஜராகி இருக்கிறார்.
Prakash Raj appears before ED : சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ED அனுப்பிய சம்மனில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி முதலில் ராணா ஜூலை 23ந் தேதி அன்று ED விசாரணைக்கு ஆஜரானார். அதைத் தொடர்ந்து ஜூலை 30ந் தேதி அன்று பிரகாஷ் ராஜ் ஆஜராக வேண்டும் என்று ED உத்தரவிட்டு இருந்தது. இந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக 29 திரைப்பட பிரபலங்கள், செல்வாக்கு மிக்கவர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ED வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பிரகாஷ் ராஜ் ஆஜர்
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து மோடியை ஒறுமையிலும், தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், தற்போது ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கி இருப்பதால் அவரை பாஜகவினர் கடுமையாக சாடி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் நிதி அகர்வால், ஸ்ரீமுகி, ஷியாமலா, பிரணிதா, ரீத்து சவுத்ரி, அனன்யா நாகல்லா, விஷ்ணு பிரியா, சிரி ஹனுமந்து, வர்ஷினி, வசந்த் கிருஷ்ணா, டேஸ்டி தேஜ் போன்றோரும் உள்ளனர். செல்வாக்கு மிக்கவர்களில் ஹர்ஷா சாய், பையா சன்னி யாதவ், லோக்கல் பாய் நானி போன்றோரும் உள்ளனர். இவர்களிடம் எப்போது விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை.
ஆன்லைன் சூதாட்ட செயலி
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைத் தொடர்ந்து, தெலங்கானா அரசு, ஐபிஎஸ் அதிகாரி சஜ்ஜனார் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டனர். இதன் காரணமாகவே இந்த ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதில் திரைப்பட பிரபலங்களும் ஈடுபட்டிருப்பது, சில பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதால், போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது ED வசம் உள்ளது.
