தமிழகத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் என்றாலே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் ஞாபகத்துக்கு வரும். காங்கிரசின் அடையாளமாகவே அவர் கருதப்பட்டு வந்தார்.

ஆனால் அந்தக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார், ஆனால் அவர் அதில் ஜொலிக்கவில்லை. கட்சிக்காக தனது சொத்துக்களை இழந்தார் எனவும் கூறப்படுவதுண்டு. பின்னர் மீண்டும் அவர் காங்கிரசில் இணைந்தார். சிவாஜி மறைந்த பிறகும் அவரது ரசிகர் மன்றங்கள் தற்போது வரை உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. ஆனால் அவை நான்கைந்து  பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் இந்த மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை பிரபுவின் அண்ணன் ராம்குமார் கவனித்து வருகிறார்.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு  பிரபுவை காங்கிரசில் இணைக்கும் முய்ற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் வசந்தகுமார் பிரபு குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வரும்போது நேரடியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடான அன்னை இல்லத்துக்குச் சென்று அவரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து பிரபுவை கட்சியில் இணைத்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.