வீடு லீஸ் பிரச்சனை.. சிக்கலில் சிக்கிய பிரபு தேவாவின் தம்பி - என்ன ஆச்சு? லீசில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?
Nagendra Prasad : வீடு வாடகைக்கு அல்லது லீசுக்கு விடுவது என்பது பல ஆண்டு காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரு பொதுவான விஷயம்தான். ஆனால் அதிலும் கூட ஒரு மாபெரும் சிக்கல் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது பிரபல நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தின் பிரச்சனை.
பிரபல நடிகர் பிரபுதேவாவை போலவே நாகேந்திர பிரசாத் அவர்களும் நடன இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் நாகேந்திர பிரசாத்தின் வீட்டை கேர் டேக்கர் என்ற நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு கொடுத்துள்ளார். அதேபோல அந்த நிறுவனம் அவரது வீட்டை மற்றொருவருக்கு லீசுக்கு விட்டதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்கின்றவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் நாகேந்திர பிரசாத் அவர்களிடம் வீடு லீசுக்கு கேட்டுள்ளார். அப்பொழுது, தான் கேர் டேக்கர் என்கின்ற நிறுவனத்திற்கு தனது வீட்டை லீசுக்கு விட்டுள்ளதாகவும், அவர்களிடம் நீங்கள் 25 லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால், மாதம் அவர்கள் தனக்கு 36,000 வாடகையாக கொடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதனை எடுத்து விக்னேஷ் அந்த நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாயை செலுத்தி, நாகேந்திர பிரசாத் வீட்டை லீசுக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த சூழலில் தான் கேர் டேக்கர் என்கின்ற அந்த நிறுவனம், கடந்த பல மாதங்களாக நாகேந்திர பிரசாத்திற்கு உரிய வட்டி பணத்தை கொடுக்காமல், அந்த 25 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளது.
இதனை அடுத்து பல மாதங்களாக பணம் வராத நிலையில் தனது நண்பர்களை கொண்டு விக்னேஷ் வீட்டாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த வீட்டை பூட்டி சீல் வைத்து, வெல்டிங் வைத்து அடைத்துள்ளார் நடிகர் நாகேந்திர பிரசாத். சுமார் ஒரு நாள் முழுவதும் வீடு இன்றி சாலையில் தஞ்சம் புகுந்த விக்னேஷ், தேனாம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை விசாரித்த போலீசார் நாகேந்திர பிரசாத்தின் கண் முன்னிலையில் அந்த வெல்டிங்கை மீண்டும் உடைத்து, விக்னேஷ் அந்த வீட்டிற்குள் தங்க அனுமதித்துள்ளனர். தனக்கு சேர வேண்டிய 25 லட்சம் வரும்வரை தான் அந்த வீட்டில் தான் இருப்பேன் என்றும் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதில் என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்றால், பிரசாத் ஒரே வீட்டை இரண்டுமுறை லீசுக்கு விட்டதுதான்.
இப்பொழுது அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற நிறுவனத்தை போலீசார் தேடி வரும் நிலையில், பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது இந்த நிகழ்வு. லீசுக்கு விடுபவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வீட்டையோ, இடத்தையோ லீசுக்கு பெறுபவர்களாக இருந்தாலும் சரி, நேரடியாக அந்த நிலத்திற்கோ, வீட்டுக்கோ சொந்தமானவர்களிடம் லீஸ் பத்திரம் போட்டுக் கொள்வது நல்லது. வீட்டின் அல்லது இடத்தின் உரிமையாளரும் நேரடியாக லீசுக்கு வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொள்வது சிறந்தது.