திரையுலகினர் மத்தியில் கடந்த சில மாதங்களாகேவே, போதை பொருள் பிரச்சனை காட்டு தீ போல் எரிந்து வருகிறது. சுஷாந்த் தற்கொலை விவகாரமே இந்த போதை பொருள் பிரச்சனை வெளிவர காரணமாக அமைந்தது.

பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உள்பட ஒருசில நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பது நாம் அறிந்தது தான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் பவன் சவுரியா என்பவருக்கு திருமண நிச்சயம் நடைபெற இருந்த நிலையில், இவருக்கும் போதை பொருள் தொடர்பாக சம்மந்தம் உள்ளதா என மணமகள் சந்தேகப்பட்டதால், இவருக்கு டாக்டர் லிகிதா என்பவருடன் நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து இரு தரப்பினரும் கடந்த சில மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து நடிகர் பவன் சவுரியா தெரிவித்துள்ளதாவது  ‘தனக்கு போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்பட்டு மணமகள் வீட்டினர் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார் என்பது உண்மை தான். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

ஆனால் நான் என்னுடைய பழக்க வழக்கத்தை லகிதாவிடம் கூறி புரிய வைத்தேன். எனக்கு எந்த போதைப்பழக்கமும் இல்லை என்பதை விளக்கினேன். லகிதா டாக்டர் என்பதால் புரிந்துகொண்டார் எனக்கு போதை பழக்கம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே தற்போது தங்களுடைய திருமணம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். 

நல்லவர்கள் தண்டிக்கப்பட கூடாது  என்பதற்கு ஏற்ப, சந்தேகத்தை மணமகள் வீட்டார் தூக்கி போட்டு விட்டு இவருடைய திருமணத்திற்கு ஓகே சொல்லி இருப்பதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.