மீண்டும் சினிமாவில் களமிறங்கும் பவர் ஸ்டார் பவன்... அஜித்திற்கு டப் கொடுக்க முயற்சி... எந்த படத்தில நடிக்கப் போறாரு தெரியுமா?

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மீது தெலுங்கு ரசிகர்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு பெற்ற நடிகர் என்பதால் அரசியலில் இறங்கிய பவன் கல்யாண், ஜன சேனா என்ற கட்சியைத் தொடங்கினார். முழு நேர அரசியலில் இறங்கிய பவன், 2018ம் ஆண்டு  'அக்னயாதவாசி' என்ற படத்தில் இறுதியாக நடித்தார். இந்நிலையில் பவன் கல்யாணை மீண்டும் திரையில் காண வேண்டும் என்ற தெலுங்கி ரசிகர்களின் விருப்பம் விரைவில் நிறைவேற உள்ளது. 

இந்தியில் 2016ம் ஆண்டு வெளியான 'பிங்க்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் குடியரசுத் தலைவர் முதல் அனைத்து தரப்பு பிரபலங்களிடமும் சிறப்பான வரவேற்பு பெற்றது. எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் "நோ, நோ மீன்ஸ் நோ தான்" என்ற சிறப்பான கருத்தை  முன்வைத்து 'பிங்க்'  திரைப்படம் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'பிங்க்'  திரைப்படத்திற்கான தென்னிந்திய ரீமேக் உரிமையை கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கினார் போனிகபூர்.

தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட "நேர்கொண்ட பார்வை"  படத்தில், அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜன் பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அஜித்தின் நடிப்பு பெண்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தியைப் போன்றே தமிழ் ரீமேக்கும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனையடுத்து தற்போது 'பிங்க்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அமிதாப்பச்சன், அஜித் குமார் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தை, பிரபல இயக்குநர் ஸ்ரீராம் வேணுகோபால் இயக்க உள்ளார். தீவிர அரசியலில் ஆர்வமாக ஈடுபட்டு வந்த பவன் கல்யாண், மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதால் இந்த படம் இந்தி, தமிழைப் போல மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.