கொரோனா பிரச்சனை தீவிரமடைந்து வரும் இந்த சமயத்தில் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கியுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் 600 கோடி ரூபாய் வரை பண முடக்கம் ஒருபுறம், புது படங்களை ரிலீஸ் செய்ய முடியாததால் அவதிப்படும் தயாரிப்பாளர்கள் மறுபுறம் என தமிழ் சினிமா தள்ளாடி வருகிறது. இந்த கஷ்டமான சூழ்நிலையில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், முன்னணி டெக்னீஷியன்கள் ஆகியோர் சம்பளத்தை குறைத்துக்கொண்டால் தமிழ் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட  முடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட பலரும் தங்களது ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு தொகையை குறைத்துக் கொண்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முக்கிய குணச்சித்திர நடிகரான நாசர் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளார். நாசர் தற்போது தான் நடித்து முடித்து உள்ள கபடதாரி என்ற படத்திற்காக வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்து கொள்வதாக தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கபடதாரி. படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அரசு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதால் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி 15 சதவீதம் சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளார்.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், நாசர் சார், கமீலா மேடம் நன்றி, ஏற்கனவே குறைந்த அளவிற்கு தான் உங்களுக்கு சம்பளம் பேசியிருந்தோம். ஆனாலும் அதில் இருந்து நீங்கள் 15 சதவீதம் குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டீர்கள். டப்பிங்கையும் முடித்து கொடுத்து விட்டீர்கள். எங்கள் படத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள ஆதரவை பாராட்டுகிறோம். உங்கள் போன்றவர்கள் அதிகரிக்க வேண்டும்" என நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.