‘வைரமுத்து மேலுள்ள அளவுக்கு அதிகமான பாசத்தால் கொஞ்சம் ஓவராகப்பேசிவிட்டேன். ஆனால் அதற்காக வருந்தவோ மன்னிப்புக் கேட்கவோ போவதில்லை என்கிறார் இயக்குநரும், வில்லன் நடிகருமான மாரிமுத்து.

சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ உடபட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘சின்மயி என்ற பெண்ணைத் தானே வைரமுத்து படுக்கைக்கு அழைத்தார். அவர் ஒன்றும் ஆண்களை அழைக்கவில்லையே ‘ என்று அனல் தெறிக்கவிட்டிருந்தார். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர் சித்தார்த் உட்பட்டபலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

நடிகர் சித்தார்த், ‘இவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். படங்களில்தான் வில்லனாக நடிக்கிறார் என்று பார்த்தால் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகவே இருக்கிறார்’ என்று விமர்சித்திருந்தார். முகநூல்,ட்விட்டர் வலைதளங்களிலும் கடுமையான வசவுகளை சம்பாதித்தார் மாரிமுத்து.

இந்நிலையில் தனது மேற்படி கருத்துக்கு வலுத்துவரும் எதிர்ப்புகள் குறித்துப் பேசிய மாரிமுத்து,’அதைப்பத்தி வருத்தப்பட ஒண்ணுமில்லை. வைரமுத்துவை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். அதனால, அவர் மேல உள்ள பாசத்தைக்காட்டுறதுக்காக அப்பிடிப்பேசுனேன். இதனால ஏற்பட்ட கெட்ட பேரை ரெண்டு நல்ல காரியம் பண்ணி ஆத்திக்கவேண்டியதுதான்’ என்று அலட்சியமாக சொல்கிறார்.