டிசம்பர் மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தான் நடிக்கவிருப்பதாக பிரபல மலையாள நடிகர் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுமார் 500 கோடிக்கும் மேலான மெகா பட்ஜெட்டில் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தயாராக உள்ளது. இப்படத்தின் நட்சத்திரங்கள் யார் யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குநர் மணிரத்னமோ இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் விக்ரம்,கார்த்தி,ஐஸ்வர்யா ராய், விஜய் சேதுபதி உட்பட ஏராளமான நட்சத்திரங்களின் பெயர்கள் அடிபடுகின்றன. பழுவேட்டரையர் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சத்தியராஜ் நடிப்பதாக அவர் கால்ஷீட் பிரச்சினையால் வெளியேறியதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் சத்தியராஜ் நடிக்கவிருந்த பழுவேட்டரையர் பாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகரும், ‘சண்டக்கோழி’உள்ளிட்ட தமிழ்ப் படங்களின் வில்லன் நடிகருமான லால் தேர்வாகியிருப்பதாகத் தெரிகிறது. மிகச் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை கருப்பு வெள்ளையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,...பல அற்புதமான வண்ணங்களை தனக்குள்ளே மறைத்து வைத்திருக்கும் இந்த கருப்பு வெள்ளை புகைப்படம் விரைவில் பழைய கனவு ஒன்றை வாழ்க்கையாக வரையக் காத்திருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.