கன்னட நடிகர்கள் பிற மொழிப் படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடிக்கிறார்கள், ஆனால் பிற மொழி நடிகர்கள் கன்னடப் படங்களில் நடிப்பதில்லை என கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
Kichcha Sudeep Speaks About Cameos : கிச்சா சுதீப் நடித்த 'மார்க்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளியான நேரத்தில், நடிகர் கிச்சா சுதீப் ஒரு பேட்டியில் கூறிய கருத்து தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர்கள் பிற மொழிகளில் சிறப்புத் தோற்றங்களில் நடிப்பது குறித்தும், பிற மொழி நடிகர்கள் கன்னடத்தில் அப்படி நடிக்காதது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், 'நாங்கள், கன்னட நடிகர்கள், பிற மொழிகளில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கிறோம். ஆனால் பிற மொழி கலைஞர்கள் எங்கள் கன்னடப் படங்களில் நடிப்பதில்லை. ஏன் என்று தெரியவில்லை! நான் தனிப்பட்ட முறையில் சில கலைஞர்களிடம் சிறப்புத் தோற்றத்தில் நடிக்குமாறு கேட்டேன். ஆனால் அது நடக்கவில்லை.

கிச்சா சுதீப் ஆதங்கம்
சிறப்புத் தோற்றங்களில் நடிக்கும் பழக்கம் இரு தரப்பிலிருந்தும் இருக்க வேண்டும். ஆனால், இப்போது அப்படி நடப்பதாக எனக்குத் தோன்றவில்லை' என்றார் கிச்சா சுதீப். சமீபத்தில், நடிகர் சிவராஜ்குமார், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நடிகர் உபேந்திரா, துனியா விஜய் போன்ற பல நடிகர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள படங்களில் நடித்துள்ளனர். ஆனால், அங்கிருந்து யார் இங்கு வந்துள்ளனர்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
'நான் பிற மொழிப் படங்களில் நடித்தது பணத்திற்காக அல்ல, நட்புக்காக மட்டுமே. சல்மான் கான் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால், நான் எந்த சம்பளமும் பெறாமல் 'தபாங் 3' படத்தில் நடித்தேன். தளபதி விஜய் எனக்கு பிடிக்கும் அதன் காரணமாக 'புலி' படத்தில் நடித்தேன். அவர் யாரையும் பற்றி தவறாகப் பேசமாட்டார், அது எனக்குப் பிடிக்கும். 'நான் ஈ' படத்தின் கதை என்னை மிகவும் பாதித்தது அதனால் நடித்தேன்' என்று கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
கிச்சா சுதீப் மேலும் சில விஷயங்கள் குறித்தும் பேசினார். 'இந்திய சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற நடிகர்களுக்கு வயது ஒரு தடையல்ல. இந்த வயதிலும் அவர்கள் நடிக்கிறார்கள், படங்கள் ஹிட்டாகின்றன. சினிமா உலகில் சிலரால் மட்டுமே தங்கள் வாழ்நாள் முழுவதும் நடித்து, ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட முடிகிறது. பலர் காணாமல் போய்விடுகிறார்கள்' என்றார்.


