தளபதி விஜய்யின் 'பிகில்' படத்துக்கு போட்டியாக ரிலீசான படம் நடிகர் கார்த்தியின் 'கைதி'. தீபாவளிக்கு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இதில், கதையை மட்டுமே நம்பி ரிலீஸ் செய்யப்பட்ட 'கைதி' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் குறைந்த திரையரங்குகளிலேயே வெளியான கைதி படத்திற்கு, மால்கள் மற்றும் திரையரங்குகளில் ஸ்கிரீன்கள் அதிகரிக்கப்பட்டு நாளுக்குநாள் வசூல் அதிகரித்து வருகிறது. இதுவே, பிகில் என்ற பிரம்மாண்டத்துடன் மோதிய கைதியின் மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 'கைதி' படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தி, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.

 

இதில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், அடுத்ததாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில், நடிகை ஜோதிகாவும், கார்த்தியும் சகோதர சகோதரியாக நடிக்கின்றனர். இவ்விருவரும் முதல்முறையாக இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம். இந்தப் படத்தில் அப்பாவாக நடிகர் சத்யராஜும், ஹீரோயினாக நிகிலா விமலும் நடிக்கின்றனர். கார்த்தியின் 20-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனராம். விஜய்யின் 'பிகில்' படத்துடன் இணைந்து வெளியான 'கைதி' படம் மாபெரும் வெற்றி பெற்றதால், பொங்கல் பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார் 'படத்துக்கு போட்டியாக 'கார்த்தி-20' படம் வெளியாகும் என கூறப்பட்டது. 

ஆனால், ரஜினியுடன் போட்டிப்போட விரும்பாத கார்த்தி மற்றும் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே விடுமுறை செய்ய முடிவெடுத்துள்ளனராம். அதேநேரம், தர்பார் படத்துடன் போட்டிப் போடுவதிலிருந்து பின்வாங்கினாலும், விஜய்யுடன் மோதுவதிலிருந்து கார்த்தி பின்வாங்க வில்லையாம். ஆம், விஜய்யின் அடுத்த படமான தளபதி-64-ம், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படமும் கோடை விருந்தாக ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.