கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பேருந்துகள், மற்றும் ரயில் உள்ளிட்ட அணைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளை சற்றே அதிகரித்து அறிவித்துள்ளது தமிழக அரசு.

அதன் படி, இன்று முதல், அனைத்து பேருந்துகளும் இயங்கி வருகிறது. குறிப்பாக, கிருமி நாசினி வைத்து பேருந்துகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடித்து மக்கள் அமர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் இன்று முதல், வழிபாட்டு தளங்கள் திறக்கவும் அரசு அனுமதி கொடுத்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில்  மாநகரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சரியாக 161 நாட்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கிய பேருந்துகளால் எளிய மக்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர். பேருந்துகளுக்குள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதையும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதையும் உறுதி செய்த பிறகே நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்குகின்றனர்.சென்னை மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் அரசுப்பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. 

இப்படி தளர்வுகள் கொண்டு வந்தாலும், முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என கூறி, நடிகர் கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும்". என கூறியுள்ளார்.