தலைவன் இருக்கிறான்.. பயம் ஏன்? - இம்சை அரசனுக்கு கை கொடுக்கும் உலகநாயகன்!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தனது எதார்த்தமான காமெடி நடிப்பால் குபீரென சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு. ஒருகாலத்தில் தமிழில் அவர் இடம்பெறாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு கொடிக்கட்டி பறந்த வடிவேலு, சமீபகாலமாக எங்கே இருக்கிறார்? என கேட்கும் அளவுக்கு அவரது நிலைமை உள்ளது.  இதற்கு, ஒருவகையில் வடிவேலுவே காரணம் எனலாம். 

தமிழில் அசைக்க முடியாத காமெடியான வலம் வந்த அவர், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தில் வடிவேலுவின் இம்சைத்தனமான நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது. 

இம்சை அரசனின் வெற்றியை அடுத்து, 'இந்திர லோகத்தில் நா அழகப்பன்', 'தெனாலிராமன்', 'எலி' என வடிவேலு ஹீரோவாக நடித்த படங்கள் மண்ணை கவ்வ, மீண்டும் தனது ட்ரேட் மார்க்கான காமெடிக்கு திரும்பினார். 

கடைசியாக 'கத்திச்சண்டை' மற்றும் 'மெர்சல்' படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த வடிவேலு, மீண்டும் இம்சை அரசனை இயக்கிய சிம்புதேவனுடன் கைகோர்த்தார். 'இம்சை அரசன்-24ம் புலிகேசி' என டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். மிக பிரம்மாண்ட செட்டுகள் அமைத்து படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கதை, காஸ்ட்யூம், நடிகர், நடிகையர் தேர்வு என அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்தார் வடிவேலு. ஒருக்கட்டத்தில் அவருக்கும், இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதனால், படப்பிடிப்பிலிருந்து வடிவேலு பாதியில் வெளியேற, இந்த விவகாரம் தயாரிப்பு சங்கம் வரை சென்று அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. 'தான்தான் எல்லாம்' என்ற  குணத்தால், வடிவேலு படவாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். எனினும், அவர் பேசிய காமெடி வசனங்கள், மீம்ஸ்களாகவும், ட்ரால்ஸ்களாகவும் சமூகவலைதளங்களில் உயிர்ப்புடன் வலம் வந்து வடிவேலு இல்லாத குறையை போக்கி வந்தன. 

இந்நிலையில், வடிவேலுவின் நிலையை உணர்ந்த உலகநாயகன் கமல்ஹாசன், வைகை புயலை கரைசேர்க்க முடிவெடுத்துள்ளாராம். தற்போது, ஷங்கரின் இயக்கத்தில் 'இந்தியன்-2' படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்து, 'தலைவன் இருக்கிறான்' படத்தை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளராம். இந்தப் படத்தில்தான், வடிவேலுவை நடிக்க வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேவர் மகன் படத்தில் இசக்கியாக வடிவேலுவை அடையாளப்படுத்திய கமல்ஹாசன், மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு அளிக்கவுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.