தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வந்து கொண்டிருக்கிறார். என்ன தான் அண்ணன், அப்பா உதவியால் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென தனி பாதை வகுத்து, தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் 'பூமி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'ஜன கன மன' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நேற்று ஜெயம் ரவியின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அவர், கொரோனா நெருக்கடி காரணமாக தனது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட வேண்டாம் என்றும், நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார். 

அதன்படி ஜெயம் ரவி ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவருடைய பிறந்த நாளை வேற லெவலுக்கு ட்ரெண்ட் செய்ததோடு மட்டுமல்லாது, ரத்த தானம், கொரோனா நிவாரணம் என பல உதவிகளை செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த இக்கட்டான காலகட்டத்திலும் என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய திரைத்துறை நண்பர்கள், மீடியா நண்பர்கள், குடும்ப நண்பர்கள், அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 

எல்லாவற்றுக்கும் மேலாக Common DP, Video Mash Up, Painting Motion Poster, Gana Song, இன்னும் பல வழிகளில் வாழ்த்துக் கூறிய ரசிகர்களுக்கு என் அளவில்லாத நன்றி.  

ரத்ததானம், காவலர்களுக்கு முக கவசம், இயலாதவர்களுக்கு உதவி போன்ற நற்செயல்களை செய்தவர்களுக்கு நன்றியைத் தாண்டியும் பெரும் கடமைப்பட்டுள்ளேன். 

என் வேண்டுகோளுக்கிணங்க கூட்டம் சேராமல் தனி ஒருவனாக நின்று இவற்றையெல்லாம் செய்து உங்கள் ஒற்றுமை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் அன்பில் திக்குமுக்காடினேன்.

இதற்கு என்ன கைமாறு செய்வேன் என அறியேன் !!.  நல்ல படங்கள் மூலமாக தான் நீங்கள் கிடைத்தீர்கள். அதை தக்க வைப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன்ன்ன்... என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.