மூளை அருகே கட்டி.. அவதிப்படும் குழந்தை - ஆன்லைனில் ஹெல்ப் கேட்டவருக்கு அள்ளிக்கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!
Actor GV Prakash Kumar : பிரபல நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் தன்னிடம் ட்விட்டர் பதிவின் மூலம் பண உதவி கேட்ட நபருக்கு உடனடியாக பெரும் தொகையை கொடுத்து உதவிய சம்பவம் பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றது.
வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பல திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றி வருபவர் தான் ஜி.வி பிரகாஷ் குமார். கடந்த சில வருடங்களாக நடிப்பை காட்டிலும் இசை அமைப்பில் அதிக கவனத்தை இவர் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிப்பு மற்றும் இசையமைப்பு என்கின்ற இரு விஷயங்களையும் சிறப்பாக செய்து வரும் ஜி.வி பிரகாஷ் குமார், பல சமூக அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் ட்விட்டர் தளத்தின் மூலம் தன்னிடம் உதவி கேட்ட ஒருவருக்கு உதவியுள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார்.
பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தனது அக்கா பையனுக்கு சிறு மூளைக்கு அருகே ஒரு கட்டி இருக்கின்றது என்றும். அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்த பொழுது அவருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியதாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த சிகிச்சைக்கு பெருந்தொகை தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், அவர் செய்வதறியாது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். இதை கண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், அந்த நபருக்கு 75 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார்.
இதை கண்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய அந்த நபர், ஜி.வி பிரகாஷ் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், பல சமூக சேவைகளிலும் ஜி.வி பிரகாஷ் குமார் ஈடுபட்டு வருவது, அவருடைய ரசிகர்களையும் பொது மக்களையும் வெகுவாக பாராட்ட வைத்துள்ளது.