பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது.  இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

அனிரூத் இசையில் "மாரி" படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டான நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தின் பாடல்கள் இருக்குமா? என ரசிகர்கள் புலம்பி வந்த சமயத்தில் "ரவுடி பேபி" என்ற ஒரே ஒரு பாடல் "மாரி 2" படத்திற்கான ஒட்டுமொத்த புரோமோஷனாக மாறியது. இதுவரை  71 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யு-டியூப்பில் "ரவுடி பேபி" பாடலை கண்டு ரசித்துள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு பட்டி, தொட்டி மட்டுமல்லாது ஃபாரின் மக்களையும் கவர்ந்த தனுஷின் "ஒய் திஸ் கொலவெறி" பாடலை ஓரம்கட்டியுள்ளது. 

 

தனுஷ் எழுதிய "ரவுடி பேபி" பாடல் முதலில் ஒரு மார்க்கமாக இருந்தாலும், அவரது டைலாக்கைப் போல கேட்க, கேட்க ரசிகர்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்தது. அப்பாடல் யூ-டியூப்பில் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் பிரபலமானது. முதன் முதலாக 250 மில்லியனுக்கு மேல் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் என்ற பெருமையை பெற்றது. அதன் பின்னர் யூ-டியூப்பிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமையை தட்டிச் சென்ற "ரவுடி பேபி", சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்தது.

 

இந்த பாடல் மட்டுமல்லாது, அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ கூட யூ-டியூப்பில் லட்சணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. யு-டியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமையை செய்த "ரவுடி பேபி" பாடல், தற்போது சத்தமே இல்லாமல் மற்றொரு சாதனையை செய்துள்ளது. 

 

இந்த ஆண்டு டாப் 10 மியூசிக் வீடியோ பட்டியலில் உலக அளவில் 7வது இடத்தை பிடித்து "ரவுடி பேபி" பாடல் வரலாறு படைத்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய பாடல் "ரவுடி பேபி" தான் என்பதால் "மாரி 2" படக்குழுவினர் செம்ம ஹாப்பியில் உள்ளனர். இதனை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள "மாரி 2" படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனுஷ், சாய் பல்லவி, நடன இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.