பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார். பாலிவுட் சினிமாவில் அவரது சாதனைகள் பற்றி பார்க்கலாம்.

தர்மேந்திரா மறைவு:

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சற்று முன் உயிரிழந்துள்ளார் . அவருக்கு வயது 89. அமிதாப் பச்சன் உள்பட பாலிவுட் பிரபலங்கள் தர்மேந்திராவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த செய்தியை கரண் ஜோஹர் தனது எகஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தர்மேந்திரா 1935 டிசம்பர் 8 அன்று பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் பிறந்தார். லூதியானாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 1952ல் பக்வாராவில் பட்டம் பெற்றார். 1960ல் வெளியான 'தில் பி தேரா ஹம் பி தேரே' படத்தின் மூலம் தர்மேந்திரா தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 

பாலிவுட்டின் உச்சத்தில் இருந்தார்:

அதன் பிறகு பல தசாப்தங்களாக பாலிவுட்டின் உச்சத்தில் இருந்தார். 60, 70, 80களில் இந்தி சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். ஹக்கீகத், ஃபூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ், சீதா அவுர் கீதா, சுப்கே சுப்கே, ஷோலே போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் பெரிய திரைகளை ஆண்டார். இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் அழகான மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவராக தர்மேந்திரா ஆனார்.

பாலிவுட்டின் 'ஹீ-மேன்:

பாலிவுட்டின் 'ஹீ-மேன்' என்று தர்மேந்திரா அழைக்கப்பட்டார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தனது சினிமா வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த சாதனையையும் தர்மேந்திரா படைத்துள்ளார். 1973ல் எட்டு ஹிட் படங்களையும், 1987ல் தொடர்ச்சியாக ஏழு ஹிட் மற்றும் ஒன்பது வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இது இந்தி சினிமா வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

நடித்த படங்களின் பட்டியல்:

ஆன்கேன், ஷிகார், ஆயா சாவன் ஜூம் கே, ஜீவன் மிருத்யு, மேரா காவ்ன் மேரா தேஷ், சீதா அவுர் கீதா, ராஜா ஜானி, ஜுக்னு, யாதோன் கி பாராத், தோஸ்த், சாஸ், பிரதிக்யா, குலாமி, ஹுகுமத், ஆக் ஹி ஆக், எலான்-இ-ஜங், தஹல்கா, அன்பத், பந்தினி, ஹக்கீகத், மம்தா, மஜ்லி தீதி, சத்யகம், நயா ஜமானா, சமாதி, தோ திஷாயேன், ஹத்யார் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க சில படங்கள். 1990களின் பிற்பகுதியிலிருந்து, தர்மேந்திரா பல வெற்றிகரமான மற்றும் பாராட்டப்பட்ட குணச்சித்திர வேடங்களில் தோன்றினார். 1997ல் பாலிவுட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் மூன்றாவது உயரிய விருது:

2012ல், இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 1954ல் தனது முதல் மனைவி பிரகாஷ் கவுரை மணந்தார். பின்னர் நடிகை ஹேமமாலினியை மணந்தார். சன்னி தியோல், பாபி தியோல், இஷா ஆகியோர் அவரது பிள்ளைகள். அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'இக்கிஸ்' என்ற படத்தில்தான் தர்மேந்திரா கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.