இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்,  'பட்டாஸ்'. இந்த திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'புதுப்பேட்டை' படத்தை தொடர்ந்து, நடிகை சினேகா இணைந்து நடித்துள்ளார். மேலும் மெஹரின் பிரிசாண்டா மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.  நாசர், முனீஸ்காந்த், நவீன் சந்திரா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் எளிமையாக நடத்தி முடித்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சூரியன் எஃப். எம் அலுவலகத்தில் இன்று 12 : 30 மணிக்கு நடந்து முடித்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். 

ஏற்கனவே பட்டாஸ் படத்தில் இருந்து வெளியான, சில் ப்ரோ, மொரட்டு தமிழன்டா, மற்றும் அனிரூத் பாடிய ஒரு பாடல் என மூன்று பாடல்களின் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மீதம் உள்ள பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.