‘தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்த இடத்தை நிரப்பப்போவது நடிகர் விஜய் சேதுபதிதான். அவரை நான் என் தம்பியாகவே நினைக்கிறேன். என் படத்தில் அவர் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன்’என்று வி.சே.வை புகழ்ந்து தள்ளுகிறார் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவின் கனவுப்படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’படத்தில் ராஜபாண்டி என்னும் தமிழ் வீரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரூ 400கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டது குறித்துப் பேட்டி அளித்த சிரஞ்சீவி,’நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து ராஜபாண்டின்னு ஒரு வீரன் தன்னுடைய படையுடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிரா சண்டை போட்டிருக்கான். அந்த கேரக்டர்லதான் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார்.

இந்த ராஜபாண்டி கேரக்டர்ல யார் நடிக்கலாம்னு பேச்சு வந்தப்போ நான்தான் விஜய் சேதுபதி பேரைச் சொன்னேன். அவர் தமிழ்ல எவ்ளோ பிஸியா நடிச்சிட்டிருக்கார்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், அவர்கிட்ட கேட்கலாம்னு தோணுச்சு.போன் அடிச்சேன். ‘ராஜ பாண்டின்னு ஒரு கேரக்டர். நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்’னுதான் சொன்னேன். ‘உங்க படத்துல நடிக்கிறது எனக்குப் பெருமை சார். நிச்சயமா வந்து நடிக்கிறேன்’னு சொன்னார்.விஜய் சேதுபதி சிம்பிள்னு தெரியும். ஆனால், இவ்ளோ ஹம்பிளான மனிதர்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஜார்ஜியாவுல ஷூட்டிங் நடக்கும்போது நாங்க தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே வரும். முக்கால்வாசிப்பேர் விஜய் சேதுபதியைப் பார்க்க வந்திருந்தவங்க.
திறமையான நடிகர்கள் வரிசையில கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நான் விஜய் சேதுபதியைப் பார்க்குறேன். விஜய் சேதுபதி என் தம்பி. என் தம்பிகூட நடிச்சதுல எனக்குத்தான் பெருமை’என்று கூறுகிறார் சிரஞ்சீவி.

இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு விளம்பரங்களில் மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் செய்யப்பட்டிருக்கும் விளம்பரங்களிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.