நடிகர் சங்க பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்னபது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நடிகர் சங்கம் கூட்டும் பொதுக்குழுவுக்கு சிக்கலோ சிக்கல் எழுந்துள்ளது. இதில் புதிய சிக்கலாக சட்டப்படி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என புது புகார் அளித்துள்ளனர்.

நடிகர் சங்க பொதுக்குழு அறிவிக்கப்பட்டதிலிருந்தே பரபரப்பு தொற்றி கொண்டது. பரபரப்பாக நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் நாசர் தலைமையிலான புதிய அணி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம்.

4000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூடும் இந்த பொதுக்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் , நடிகர் சங்கம் மேல் வராகி எனபவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் , நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் திட்டமிட்டபடி செயல்படாதது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, சினிமா நூற்றாண்டு விழா உள்ளிட்டவை குறித்து பேசப்பட உள்ளது. 

நடிகர் சங்க தேர்தலில் ஆரம்பத்தில் விஷால் அணியுடன் இருந்த ரித்தீஷ் , கருணாஸ் , வடிவேல் போன்றோர் இப்போது அதிருப்தியில் உள்ளனர். இதன் எதிரொலியும் இந்த பொதுக்குழ்வில் எதிரொலிக்கும்.

 அதே போல் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் போன்றோரை சஸ்பெண்ட் செய்ததால் அவர்கள் தங்களை பங்கேற்க அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். அது நிலுவையில் உள்ளது. 

உறுப்பினர் வராகி தலைமையில் ஒரு குழுவினர் நடிகர் சங்க கணக்கு வழக்கு குறித்து பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவார்கள் என தெரிகிறது.

 பொதுக்குழு நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து நேற்று கமிஷனர் அலுவலகம் வந்த விஷால் , நாசர் , கார்த்தி ஆகியோர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து நடிகர் சங்க வளாகத்தில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டனர்.

அதற்கு போலீசார் அனுமதி அளித்தனர் என்று விஷால் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை எதிர்த்து மக்கள் செய்தி மையம் அமைப்பின் சார்பில் அனபழகன் காவல் துறையில் புகார் ஒன்றை அனுப்பினர்.

நேற்றிரவு வேக வேகமாக பொதுக்குழு அரங்கம் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா எனபதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. போலீசார் உள் அரங்கத்தில் நடத்தி கொள்ளுங்கள் நாங்கள் சட்டப்படி அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நடிகர்சங்க செல்வாக்கையும் கமிஷனர் ஜார்ஜ் கண்டு கொள்ளவில்லையாம். சட்டப்படித்தான் நடப்போம் நாளைக்கு நீதிமன்ற பிரச்சனை வந்தால் நாங்கள் தான் கூண்டிலேறணும் என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டப்படி போலீசார் பாதுகாப்பு இருக்க வாய்ப்பில்லை. 

மோதல் எதாவது நிகழ்ந்தால் ஒழிய போலீசார் வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.