அரசியலுக்கு வர வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அறிவுரை வழங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. தொடக்கக் காலத்திலிருந்து நடிகர் அமிதாப்பச்சனுடன் இருந்துவரும் நட்பு, அன்பு, பாசம் ஆகியவற்றை இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார்.  “அமிதாப் பச்சன் என் மீது அதிக அன்பு கொண்டவர். நாங்கள் இருவரும் ஒரு முறை தமிழகத்தில் சந்தித்தபோது, சில விஷயங்கள் குறித்து என்னிடம் பேசினார். 60 வயதுக்குப் பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அமிதாப் என்னிடம் கூறினார். 60 வயதில் 3 விஷயங்களைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கினார். 
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது என்று என்னிடம் அமிதாப் தெரிவித்தார். இந்த விஷயங்களை எல்லாம்  நான் அமிதாப்பிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதன்படியே நடந்தேன். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அவருடைய மூன்றாவது ஆலோசனையை என்னால் பின்பற்ற முடியவில்லை.” என்று ரஜினி  தெரிவித்தார்.  அமிதாப், தனுஷ் நடித்த ‘ஷபிதாப்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகவும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி குறிப்பிட்டார்.


சில மாதங்களுக்கு முன்பு ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டாம் என்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கருத்து கூறியிருந்தார். தற்போது அரசியலுக்கு வர வேண்டாம் என்று அமிதாப் ஏற்கனவே கூறியதாக ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்.