விண்ணை முட்டிய வெங்காயத்தின் விலை தற்போது தான் சற்று குறைய ஆரம்பித்துள்ளது, இருந்தாலும் எங்க திடீரென விலை ஏறிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உலவி வருகிறது. இந்நிலையில் தங்கத்தை விட மதிப்புமிக்கதாக கருத்தப்படும் வெங்காயத்தால் ஆன காதணியை, தனது மனைவி டிவிங்கிள் கண்ணாவிற்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். 

கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் முன்னணி நாயகனான அக்‌ஷய் குமாரும், கரீனா கபூரும் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் கரினா கபூருக்கு வழங்கப்பட்ட வெங்காய காதணியை அவர் வாங்க மறுத்துவிட்டார். அதனை கேட்டு வாங்கி வந்த அக்‌ஷய் குமார், தனது மனைவி டிவிங்கிள் கண்ணாவிற்கு அதனை பரிசளித்துள்ளார். 

கணவரின் காஸ்ட்லி கிப்ட்டால் மயங்கிய டிவிங்கிள் கண்ணா, வெங்காய காதணியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கபில் ஷர்மா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட காதணியை கரீனா கபூர் விரும்பவில்லை. ஆனால் அது எனக்கு பிடிக்கும் என்று நினைத்த என் கணவர், அதனை எனக்காக வாங்கி வந்துள்ளார். சில சமயங்களில் சின்ன, சின்ன விஷயங்கள் கூட மனதை கவரலாம் என குறிப்பிட்டுள்ளார். வெங்காயம் விற்கிற விலைக்கு அக்‌ஷய் குமார் செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.