சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி , தற்போது இந்தியாவிலும் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்டி வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கம் தற்போது, இந்தியாவில் லட்சத்தை எட்டியுள்ளது.  இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.

இதன் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு, 3 ஆம் கட்டமாக இந்த மாதம் முழுவதும் நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து கொண்டே செல்வதால், 4 ஆம் கட்டமாக ஊரடங்கு போடப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

சற்றும் எதிர்பாராத இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டி வந்த பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முடிந்தவரை உணவு மற்றும் அடிப்படை உதவிகள் எந்த சிரமம் இன்றி கிடைத்திட, அரசாங்கம் ஒருபுறம் உதவி வந்தாலும், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உதவி வருகிறார்கள்.

அதே நேரத்தில் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்தியாவில் கோரோனோ பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, பாரத பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு பணிக்கும், முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பு பணிக்கும் தொடர்ந்து நிதி வழங்கினர்.

அந்த வகையில் ஏற்கனவே  பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி பிரதமரின் நிதிக்கு வழங்கினார் என்பதும், அதை தொடர்ந்து  மும்பை மாநகராட்சியின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்கினார் என்பது நாம் அறிந்தது தான்.

இதை தொடர்ந்து  கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு மும்பை போலீஸ் காவலர்களான சந்திரகாந்த் பென்டூர்கர் மற்றும் சந்தீப் சர்வ் ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். இதனால், மக்கள் பணி செய்து உயிர் நீத்த இந்த காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

இந்த உதவிகளை தொடர்ந்து, தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, சினிமா மற்றும் டிவி கலைஞர்கள் 1500 பேருக்கு ரூபாய் 45 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்த தகவலை CINTAA இலைச்செயலாளர் அமித் பெல்ஷ் என்பவர் உறுதி செய்துள்ளார். இந்த நிதி, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1500 கலைஞர்களின் வாங்கி வணக்கில் 3 ஆயிரம் வீதம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த உதவிகளுக்கு இவரை ரியல் ஹீரோ என பாராட்டி ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.