கடந்த சில பல ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாத நடிகர் அஜீத் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மேல் உள்ள அளவு கடந்த அபிமானத்தால் அவருக்கு திதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று குளியலறையில் மயங்கி விழுந்து  மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படப்பிடிப்பில் கொடுத்த வாக்குறுதியின்படி போனிகபூர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஜீத். அதில் முதல் படமான ‘பிங்க்’ ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

மறைந்த ஸ்ரீதேவியின்  முதலாம் ஆண்டு  நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு  இன்று காலை நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு திரையுலக பிரபலங்கள் யாருக்கும் தெரிவிக்கப்படாத நிலையில்  நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொண்டார். அவர் வந்த சில நிமிடங்கள் கழித்து அஜீத்தின் மனைவி  ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவிக்கு திதி  வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் நடிகர் அனில் கபூர், ‘பிங்க்’ ரீமேக் பட இயக்குநர் ஹெச்.விநோத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.