சமீபகாலமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இருப்பதாக மகளிர் அமைப்பினர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழில், "அடிடா அவள, எவன்டி உன்ன பெத்தான், லூசுப்பெண்ணே,  போன்ற பாடல்களில் இடம்பெற்ற வரிகளுக்கு மகளிர் அணியை சேர்ந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.  

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான ஆபாச வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியதாக, ஹனி சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல பஞ்சாபி பாடகரான இவர்,  இந்தி படங்களிலும் பல பின்னணி பாடல்கள் பாடியுள்ளார்.  சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

ஹனி சிங் சமீபத்தில் மக்னா என்ற பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். இந்தப் பாடலில் பெண்ணை இழிவுபடுத்தும் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. அவருக்கு பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  இந்த ஆணையத்தின் தலைவி மனிஷா கூறும்போது அயல்நாடுகளில்  உள்ளவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுகின்றனர். ஆனால் ஹனி சிங் பெண்களை பற்றி கேவலமாக பாடியிருக்கிறார். இவரை ஆபாச பாடலை அனுமதிக்க கூடாது. மாநில அரசு தடைவிதிக்க வேண்டும் என கோரியுள்ளார். ஹனி சிங் மீது பஞ்சாப் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.