சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லி அருகே போடப்பட்டுள்ள தாராவி செட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும் ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. 

அப்போது வேகமாக வந்த ஜீப், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடிகர் அருள்தாஸ் இடது காலில் மோதி, ஜீப்பின் டயர் அவரது காலில் ஏறி இறங்கியது. இதில் அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, மூன்று விரல்கள் நசுங்கியது. இந்த விபத்தின் காரணமாக நேற்று காலா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் உடனடியாக அருள்தாஸ் மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டார். 

உடனடியாக அவரை அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர்,  தற்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மூன்று மாதத்திற்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

காலா படத்தில் ரஜினியுடன்  நடித்து வரும் அருள் தாஸ்  'நான் மகான் அல்ல' , 'நீர்ப்பறவை', 'சூது கவ்வும்','தர்மதுரை' உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.