மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை ஆந்திராவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர்கள் படமாக எடுக்கப்போவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் தொடர்ந்து வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகிவருகின்றன. சில்க் ஸ்மிதா, சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ஏற்கனவே வெளிவந்து கவனம் ஈர்த்தன. வாழ்க்கை வரலாறு படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மட்டும் ஏராளமான வாழ்க்கை வரலாறு படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின. 

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் படங்கள் ஏற்கனவே உருவாகிவருகின்றன. இதேபோல மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின்  வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகிவருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. 

கட்சித் தலைவர்களைத் தாண்டி விளையாட்டுப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக எடுக்க பலத்த போட்டி நிலவிவருகிறது. பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும் படமாக ஆக இருக்கின்றன. விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் மாதவன் நடிக்கிறார். 

தொடர்ச்சியாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகிவரும் வேளையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தெலுங்கு பட அதிபர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்க இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பதற்காக இந்தி நடிகர் அனில்கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தெரிகிறது. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றார்களா என்ற தகவல் தெரியவில்லை. தற்போது படம் பற்றிய தகவல் மட்டுமே கசிந்துள்ளன.