’என் படத்தின் கதாநாயகன் கவின் என்று சொல்லிக்கொண்டு கதாநாயகிகளைத் தேடியபோது அத்தனை நடிகைகளும் அவர் பேரைக் கேட்டவுடன் பயந்து நடிக்க மறுத்தார்கள்’என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன்.

தனது நிறுவனமான லிப்ரா புரடக்‌ஷன்ஸ் மூலமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவினை நாயகனாகக் கொண்டு ’நட்புன்னா என்னன்னு தெரியுமா?’என்ற படத்தைத் தயாரித்தவர் ரவீந்திரன் சந்திரசேகரன். நீண்ட நாள் கிடப்பில்  கிடந்த அப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி சுமாராக ஓடியது. இந்நிலையில்  சமீபத்தில் சின்ன பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் ஆபத்பாந்தவனாகவும் மாறியிருக்கும் ரவீந்திரன், நேற்று நடந்த ‘வாழ்க விவசாயி’ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையிலேயே அப்படத்தை வாங்கி வெளியிடுவதாக அறிவித்து படப்பிடிப்புக் குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அடுத்துப் பேசிய அவர் மூன்று ஆண்டுகளுக்கு கவினை வைத்துப் படம் தயாரித்த அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டபோது,’அந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாகப் போட நான் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. கவின் பேரைக் கேட்டதும் நடிகைகள் வரிசையாக நோ சொன்னார்கள்.ஒரு நடிகை கூட நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. நான் கவினிடமே கேட்டேன். என்னய்யா ஒரு நடிகை கூட  வர மாட்டேங்கிறாங்க. நீ தப்பு கிப்பு பண்ணிட்டியா என்று கேட்டேன்.

இல்ல சார் சீரியல் நடிகன்னு தயங்குறாங்கன்னு சொன்னார். அந்த மாதிரி தயக்கம் எல்லாம் இருக்கு. ஆனா வாழ்க விவசாயி படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியா நடிக்க வசுந்தரா ஒப்புக் கொண்டு நடித்ததைப் பாராட்ட வேண்டும்.அதாவது சீரியல் நடிகர்,நடிகை என்றால் இளக்காரமாக இருக்கிறது. ஆனால் அதுதான் அவர்களுக்கு கடைசி வேடந்தாங்கல் என்பது தெரிவதில்லை.அல்லது புரிவதில்லை” என்று வசுந்திராவுக்கு  ஒரு பாராட்டுரை வழங்கினார்.