தனக்கு இருக்கும் மந்தமான மார்க்கெட்டுக்கு செய்திகளில் இடம்பிடிக்கவேண்டுமெனில் புதுமையாக எதையாவது செய்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடியில் நடிகை நயன்தாராவை இக்கட்டில் மாட்டிவிட்டிருக்கிறார் நடிகர் ஜித்தன் ரமேஷ்.

தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நயன் இணைந்து நடித்தபடம் ‘நானும் ரவுடிதான்’. இப்படத்தில் வில்லன் பார்த்திபனைப்பார்த்து தாரா ‘நான் உங்கள போடணும் சார்’ என்று பேசிய வசனம் ரசிகர்களை அப்போதே பெரும் கிளர்ச்சிக்குள்ளாக்கியது. அதை மக்கள் ஒருவழியாக மறந்திருக்கும் நிலையில் தனது அடுத்த படத்துக்கு அதே வசனத்தை டைட்டிலாக வைத்திருக்கும் ஜித்தன் ரமேஷ், இன்னும் கொஞ்சம் விவரமாக படத்துக்கு நயன்தாராவே வசனம் எழுதிக்கொடுத்திருப்பாரோ என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தி விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும்  ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது "நானும் ரௌடி தான்" படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

நயன் நன்றியை ஏற்றுக்கொள்கிறாரா அல்லது தன் பெயரை டேமேஜ் பண்ணத்துவங்கியிருப்பதற்காக மான நஷ்ட வழக்கு போடுவாரா என்பதப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.