5 முதல் 6 ரூபாய்க்கு விற்கக்கூடிய ஒரு வாழைப்பழத்துக்கு 221 ரூபாய் பில் போட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மானத்தை இந்தி நடிகர் ராகுல் போஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு காற்றில் பறக்கவிட்டிருந்த நிலையில், அந்த ஹோட்டலுக்கு கலால் துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ். இவர், தமிழில், கமலின் ’விஸ்வரூபம்’’விஸ்வரூபம் 2’ ஆகிய இரு படங்களிலும் முக்கிய  வில்லனாக நடித்திருந்தார். இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும்  இவர், இந்தி படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக சண்டிகர் சென்றிருந்தார். அந்த ஹோட்டலில் இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்திருந்த அவருக்கு 442.50 பில் வந்திருந்தது.

அதைக்க்கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் , ...சண்டிகரில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளேன். இரண்டு வாழைப்பழம் கேட்டேன். பழத்துடன் பில் வந்தது. இதை பாருங்கள். இந்த இரண்டு பழங்களின் விலை, ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50. இதற்கு நான் தகுதியானவன் தானா என்பது தெரியவில்லைஎன்று தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோவில், தான் தங்கியிருக்கும் அறையையும் வாழைப் பழங்களுக்கான பில்லையும் காட்டி, இதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும், பழங்கள் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படாது என்று யார் சொன்னது? எனவும்  பதிவிட்ட்டிருந்தார்.பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வந்த நிலையில், விதிகளை மீறி ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜேடபிள்யூ மேரியட் ஓட்டலுக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக ஓட்டலுக்கு ஒரு வாழைப்பழத்துக்கு ரூ.12,500 பில் போடப்பட்டுள்ளது.