மனிதர்கள்தான் எத்தனை விசித்திரமானவர்கள்...’இவ்வளவு நல்ல படத்தையா திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் பார்த்தேன்’ என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளான மலேசியத் தமிழர் ஒருவர் அப்பட இயக்குநரின் வங்கிக் கணக்கு படத்தின் டிக்கட் தொகையை அனுப்பி நெகிழச் செய்துள்ளார்.

’நெடுநல்வாடை’ கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியான, முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்த படம்.  அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கியிருந்தார். விமர்சகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட அப்படம் நல்ல வசூலையும் செய்ததோடு, பெங்களூருவில் நடந்து வரும் சர்வதேசப் படவிழாவில் சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருதையும் பெற்றது.

இந்நிலையில் சற்றுமுன்னர் இயக்குநர் செல்வக்கண்ணன் தனது முகநூல் பதிவில்,...நெடுநல்வாடை சில விசித்திர அனுபவங்களை தந்திருக்கிறது. மலேசியாவில் இருந்து ஒரு நபர் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் பார்த்துவிட்டு "இவ்வளவு நல்ல படத்தை ஓசியில் பார்த்தது குற்ற உணர்ச்சியாக உள்ளது" என்று செய்தி அனுப்பி என்னை வற்புறுத்தி அக்கவுண்ட் எண் வாங்கி பணம் அனுப்பி வைத்திருக்கிறார்.
வாழ்க அவரது நேர்மை’...என்று பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவுக்குக் கீழே சம்பந்தப்படவரின் நேர்மையைப் பலரும் பாராட்டிக்கொண்டிருக்க இன்னொருவரும் தனது கமெண்டில் ...இதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது. ஆனால் தங்களை எப்படி தொடர்பு கொள்வது என தெரியவில்லை...எமது தொடர்பு எண் ..................தங்களுக்கு தொலைபேசியிலாவது வாழ்த்துக்கள் கூற வேண்டும் என எண்ணுகிறேன்...வாய்ப்பு தருவீர்கள் என நம்புகிறேன் ஐயா...நம்பிக்கையோடு...Rajkumar என்று பதிவிட்டிருக்கிறார்.