நரிக்குறவ சமுதாயத்தினரை திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு!
நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த, சிலரை டிக்கெட் வாங்கியும் திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர், ஊழியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி. இந்த திரையரங்கில் இன்று நடிகர் சிம்பு நடித்த வெளியான 'பத்து தல' படம் பார்க்க வந்த, நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், டிக்கெட் வாங்கிய போதும், அவர்களை திரையரங்கின் உள்ளே ஊழியர் ஒருவர் அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் நரிக்குறவர் சமுதாயத்தை செய்தவர்களுக்கு, தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ஆதரவு குரல் கொடுக்க துவங்கினர். இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலான நிலையில், சற்று தாமதமாக அந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க ரோகிணி திரையரங்கு நிர்வாகம் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
ரோகிணி திரையரங்கில், தீண்டாமை கொடுமை நடப்பதாக... கூறி இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ரோகிணி திரையரங்கு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நரிக்குறவ குடும்பத்தினர் படம் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர். மேலும் ரோகினி திரையரங்கின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நரிக்குறவர் குடும்பத்தினருடன் சில குழந்தைகள் இருந்ததாகவும், 'பத்து தல' திரைப்படம் யு /ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரோகினி திரையரங்கம் வெளியிட்ட இந்த அறிக்கை பல்வேறு கேலி மற்றும் கிண்டலுக்கு ஆளான நிலையில், பலர் யூ /ஏ சான்றிதழுக்கு என்ன அர்த்தம் என்பதை, விவரமாக கூறி அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்து வந்தனர். காரணம் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்படும் படங்களுக்கு 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தனியாக வந்து படம் பார்க்க கூடாது என்பது தான் விதி. பெற்றோர் துணையோடு வந்து பார்க்க எந்த தடையும் இல்லை என கூறினார்.
DASARA படத்தின் FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்த்த கீர்த்தி சுரேஷ் - நானி! வைரலாகும் போட்டோஸ்..!
இந்த விவகாரத்திற்கு, நடிகரும்.. இசையமைப்பாளருமான... ஜிவி பிரகாஷ் முதற்கொண்டு, நெட்டிசன்கள் பலர் பொங்கி எழுந்த நிலையில், தற்போது ரோகினி திரையரங்க ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த காவிரி என்ற பெண் புகார் அளித்ததின் அடிப்படையில், கோயம்பேடு போலீசார் எஸ் சி, எஸ் டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.