66வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் உட்பட திரைத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். கண் கவரும் கலைநிகழ்ச்சிகளுக்கு இடையே , விருது வழங்கும் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

"வடசென்னை" படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுக்கொண்டார். அதேபோல் '96' படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது "செக்கச் சிவந்த வானம்" படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு கிடைத்தது. விஷ்ணு விஷால் நடிப்பில் "ராட்சசன்" படத்தை இயக்கிய ராம் குமாருக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. 

சிறந்த நடிகைக்கான விருது '96' படத்தில் அனைவரது மனைதையும் கொள்ளை கொண்ட த்ரிஷாவிற்கும், "கனா" படத்தில் அடித்து தூள் கிளப்பிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை "கனா" படத்தில் நடித்த சத்யராஜும், சிறந்த துணை நடிகைக்கான விருதை "கோலமாவு கோகிலா" படத்தில் நடித்த சரண்யாவும் பெற்றுக்கொண்டனர். 

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது '96' பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிற்கும், சிறந்த பாடலுக்கான விருது அதே படத்தில் இடம் பெற்ற "காதலே, காதலே" பாடலுக்கும் வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த பாடகிக்கான விருதும் "காதலே, காதலே" பாடலை பாடிய சின்மயிக்கு கிடைத்தது. ஆக மொத்தம்  5 பிரிவுகளின் விருதுகளைப் பெற்ற '96' திரைப்படம், இந்த ஆண்டு அதிக விருதுகளை பெற்ற தமிழ் திரைப்படம் என்றற பெருமையை பெற்றது.  

சிறந்த பாடகருக்கான விருதை "பியார் பிரேமா காதல்" படத்தில் 'ஓ பெண்ணே' பாடலைப் பாடிய சித் ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார். சிறந்த தமிழ் படத்திற்கான விருது கதிர் நடிப்பில் வெளியான "பரியேறும் பெருமாள்" படத்திற்கு வழங்கப்பட்டது.