Asianet News TamilAsianet News Tamil

’96 விமர்சனம்- ‘லவ் ஃபெயிலியர் கேஸா நீங்க?’

’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல’ என்கிற ஃபீலில் அறிமுக இயக்குநர் பிரேம் கொட்டியிருக்கும் உணர்ச்சிக்குவியல் இந்த ’96.

96 movie review
Author
Chennai, First Published Oct 2, 2018, 6:18 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல’ என்கிற ஃபீலில் அறிமுக இயக்குநர் பிரேம் கொட்டியிருக்கும் உணர்ச்சிக்குவியல் இந்த ’96.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகுமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி,த்ரிஷா கிருஷ்ணன்,தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள் போன்ற சிறிய நட்சத்திரப்பட்டாளத்துடன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பெரும்பாலும் அறிமுக தொழில் நுட்பக்கலைஞர்களுடன் ‘96ம் ஆண்டை நோக்கி ஒரு கவித்துவமான காதல் பயணம் செய்திருக்கிறார் இயக்குநர்.

விஜய் சேதுபதி ஒரு டிராவல் ஃபோட்டோகிராபர். அது என்ன டிராவல் ஃபோட்டோகிராபி என்று கேட்டுவிடமுடியாதபடி படத்தின் துவக்கத்திலேயே மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சிகளுடன் கூடிய ஒரு பாடலை வழங்கி நம்மை ஷட் அப் செய்துவிடுகிறார்கள் ஒளிப்பதிவாளர்களும் இயக்குநரும்.

கதைக்கு வருவோம்.

’96 ம் ஆண்டு ப்ளஸ்2’ படித்த வி.சேதுபதியின் நண்பர்கள் தற்செயலாக செல்போனில் பேச ஆரம்பித்து, நட்பு கொழுந்துவிட்டு எரிய, 20 ஆண்டுகளுக்குப்பிறகு திடீரென்று ஒரு கெட் டு கெதருக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

ப்ளஸ்2வில் உயிருக்குயிராய் காதலித்து, அநேகம் பேர் போல், இணையமுடியாமல் போன வி.சே.வும், சிங்கப்பூரிலிருந்து இந்த சந்திப்புக்காகவே வந்திருக்கும், மறுநாள் அதிகாலையே ஃப்ளைட் பிடித்து திரும்பவேண்டியிருக்கும் த்ரிஷாவும் மீண்டும் சந்திக்கிறார்கள். அந்த இரவு அவர்களுக்கானதாக ஆகி உருகி,மருகி, மீண்டும் காதல் பெருகி அந்த சந்திப்பின் இரவு முழுக்க பேஏஏஏஎசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களது இந்த  மறுசந்திப்பில் தப்புத்தண்டா எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற சபலத்தை திரைக்கதையில்  சக கேரக்டர்கள் மூலம் தூவி இடைவேளைக்குப் பின்னர் ஒரு நீண்டநெடிய இரவைக் கதையில் நகர்த்துகிறார் இயக்குநர்.

மனதின் ஓரத்தில் ஒரே ஒரு காதல் தோல்வியையாவது சேமித்து வைத்திராத மனிதன் ஏது?

அந்த வகையில் மிகவும் சுவாரசியமான கதைதான் ’96. ஏனோ ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் இருக்கும் ரம்மியம் நடப்பு காட்சிகளில் அநியாயமாக மிஸ்ஸிங்.ஆனால் நடிப்பில் வி.ஷேவும், த்ரிஷேவும் ரணகளம் செய்திருக்கிறார்கள். இளமை பொங்கப்பொங்க நம்மை ஏங்க வைக்கிறார் த்ரிஷா. போலவே ஃப்ளாஷ்பேக் காட்சிகளில்  இளம்வயது த்ரிஷாவாக வரும் கவுரியும், சேதுபதியாக வரும் ஆதித்யாவும் வெகு சிறப்பு.

இசை கோவிந்தமேனன். ‘96ம் ஆண்டைக் காரணம் காட்டி படம் முழுக்க இளையராஜா பாடல்களால் நிரப்பியபிறகு சேட்டன் பாட்டு எங்ஙணம் எடுபடும்? ஆனால் த்ரிஷாவின் கல்யாணக் காட்சியில் அதிர ஒலித்ததே அந்த நாயன தவில் இசை உங்களுக்கு இருக்கு பிரதர் ஒலிமயமான எதிர்காலம்.

ஒளிப்பதிவு மகேந்திரஜெயராஜு, சண்முகசுந்தரம் என்று இரட்டையர்கள் கதைக்குள்ளே ஆழ்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஆகச்சிறந்த அம்சமே காட்சிகளை நறுக் சுறுக் எனக்கத்தரிக்காமல் நிறுத்தி நிதானமாக கதை சொல்லியிருப்பது. ஒரு ப்ரேமம் பார்சல் டைரக்டர் பிரேம்.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு தனக்காக 29 வருடங்களாக இன்னொரு பெண்ணைக் கூட காதலனை நோக்கி ‘சொல்லுடா நீ இன்னும் வர்ஜினா?’ என்று கேட்டு அதை உறுதி செய்தபிறகும் ஒருத்தர் கையை இன்னொருத்தர் பற்றிக்கொள்ள 18 சீன்கள் வரை இழுத்ததையெல்லாம் டி.ராஜேந்தரே கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்.

கனம் கோர்ட்டார் அவர்கள் இ.பி.கோ.497ன் படி திருமணத்திற்குப்பின்னும்… என்று சலுகை அறிவித்திருக்கும் நிலையில் த்ரிஷாவையும்,வி.சேவையும் கொஞ்சம் அத்துமீற அனுமதித்திருக்கலாமோ என்பதைத் தாண்டி காதல் தோல்வியாளர்கள் அனுபவித்துக் கொண்டாடக்கூடிய படமே ’96.

Follow Us:
Download App:
  • android
  • ios