சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இன்று வெளியான விஜய்சேதுபதி-த்ரிஷாவின் ‘96’ பட அதிகாலைக் காட்சிகள் அநேகமாக நகர் முழுக்க ரத்து செய்யப்பட்டன.

 

இதனால் அதிகாலை 5 மணிக்கே படம் பார்க்க, குளிக்காமல், பல் துலக்காமல் கூட வந்த விஜய்சேதுபதி ரசிகர்கள் கெட்ட வெறுப்புக்கு ஆளாகி, அடுத்த காட்சி எத்தனை மணிக்குத்தான் என்கிற விபரம் கூட தெரிந்துகொள்ளமுடியாமல் வீடு திரும்பினார்கள்.

இதற்கு கே.டி.எம். [key delivery message] எனப்படும் தொழில்நுட்ப தொல்லையைக் காரணமாக சொன்னாலும் வழக்கமாக நடைபெறும் பணப்பட்டுவாடா பற்றாக்குறை பஞ்சாயத்துகளும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

சினிமாவில் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதித்து வரும் விஜய் சேதுபதி ‘96’ படத்தின் இருதி நிலவரப் பிரச்சினைகளுக்காக தனது சம்பளத்தில் மூன்று கோடியை விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி, கையிலிருந்து மேலும் 2 கோடி ரூபாய் கொடுத்து 96’ பட ரிலீஸுக்கு தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு உதவினாராம். 

தியேட்டர்காரர்களின் வசூல் அரிப்புக்காக, சமீபகாலமாக மெல்ல அதிகரித்துவரும் அதிகாலை 4மணி 5 மணிக் காட்சிகளை மக்கள் ஆதரிக்காமல் இருப்பதே உங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும் பர்ஸுக்கும் நல்லது. ஏனெனில் தாங்கள் எடுக்கும் படத்தின் ரிலீஸ் நாளில் என்னென்ன பஞ்சாயத்துகள் வரும்? அது எத்தனை மணிக்கு தீர்ந்து எத்தனை மணிக்கு ரிலீஸாகும் என்று பெரிய படம் எடுக்கும் எந்த தயாரிப்பாளருக்கும் தெரியாது.