நடிகை ஜோதிகா '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த பின்,  தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களையும், சமூக கருத்து கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் 'ராட்சசி'.

இந்த படத்தில் ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா.  மேலும் அரசு பள்ளியில் அரங்கேறும் அவலங்களை, ஒரு தலைமை ஆசிரியர் நினைத்தால் மாற்றிவிடலாம், குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்ற முடியும் என்கிற கருத்தை ஆழமாகவும் சுவாரசியமாகவும் கூறியுள்ளார் இயக்குனர்.

இந்தப்படத்தை பார்த்த பலர், இது போன்ற படத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் நாளை முதல் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 'ராட்சசி' படம் பார்க்க கட்டண சலுகையை அறிவித்துள்ளது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

பள்ளி நிர்வாகத்தின் மூலம் மொத்தமாக டிக்கெட் புக் செய்தால் அதில் இருந்து 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் பலர் இந்த படத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.