44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த்..!!
சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி அன்று துவங்க உள்ள நிலையில், இதற்கான பிரத்தியேக டீசரை நடிகர் ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டுள்ளார்.
187 நாடுகள் கலந்து கொள்ளும், ஒலிம்பியாட் போட்டியில் 2000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வீரர் வீராங்கனைகளை வரவேற்கவும், அவர்கள் தங்குவதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது தமிழக அரசு.
மேலும் இந்த சர்வதேச செஸ் விளையாட்டுப் போட்டிகளை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக, டிஜிட்டல் போர்டுகள் வைக்கவும் தமிழக முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த போட்டிக்காக மகாபலிபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தின் அருகே அமைந்துள்ள நட்சத்திர விடுதி வளாகத்தில், சுமார் 52,000 சதுர அடியில்... சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக நவீன உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செஸ் விளையாட்டுகளை சிறப்பாக நடத்திட 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர் குழு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு குறித்து, டீசர் ஒன்றை வெளியிட, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த டீசரை சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: லலித் மோடியுடன் டேட்டிங்.. விரைவில் திருமணமா? ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த சுஷ்மிதா சென்
அதில் "கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு தமிழக முதல்வர், மதிப்பிற்குரிய திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். 44 வது எஃப் ஐ டி இ சி ஒலிம்பியாட் போட்டி, முதல் முறையாக இந்தியாவில் அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28ஆம் தேதி அன்று மாண்புமிகு பாரத பிரதமர் மதிப்பிற்குரிய திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.
போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இந்த டீசர் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.