28 percent tax for movies clubs this is not fair says actor Kamal

இந்தி சினிமாவுக்கு இணையாக, பிராந்திய மொழி திரைப்படங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு நாடு தழுவிய ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிவித்துள்ளது. அதில் திரைப்படங்களுக்கான கட்டணத்திலும் 28% வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு நாடு தழுவிய அளவில் சினிமா துறையினர் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

“ஜிஎஸ்டி வரி சினிமாவுக்குப் பொருந்தாது, திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட திரைத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று தென்னிந்திய வர்த்தக சபையில் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் கமல்ஹாசன் பேசியது:

“புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது.

இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று.

இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28% வரி, திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது.

மேலும், இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு ஒற்றை கலாச்சாரம் பழக்கவழக்கம் ஆகியவற்றை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்.

இதுபோன்ற நடவடிக்கைகள் அங்குதான் இட்டுச் செல்லும் பிராந்திய மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும்.

எனவே மத்திய அரசு இந்த வரிவிதிப்பை மறு பரிசீலனை செய்து, வாய்ப்பு இருந்தால், வாபஸ் பெற வேண்டும்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.