2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் சம்பாதித்துள்ள 100 பேர் கொண்ட பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. தனுஷ் நயன்தாரா ஆகியோர் கூட இடம் பெற்றுள்ள அப்பட்டியலில் ஆச்சர்யமாக அஜீத் நூறாவது இடத்தில் கூட இல்லை.

 இப்பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி ரூ.228.09 கோடி சம்பாதித்துள்ளார். மூன்றாவது இடத்தை ’2.0’வில் ரஜினியின் வில்லனும்  பாலிவுட் நடிகருமான அக்‌ஷய் குமார் ரூ.185 கோடியுடன் பிடித்துள்ளார்.

தீபிகா படுகோனே 112.8 கோடி ரூபாயுடன் 4வது இடத்திலும், பெண்களின் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார். அவரை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி 101.77 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார்.ஆமீர்கான், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனேவின் கணவர் ரன்வீர் சிங், சச்சின், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் முறையே 10 இடங்களுக்குள் உள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.66.75 கோடியுடன் 11-வது இடத்தை பிடித்துள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 கோடியுடன் இந்த பட்டியலில் 14-வது இடத்தை பிடித்துள்ளார். ரஜினியை தொடர்ந்து, நடிகர் விஜய் ரூ.30.33 கோடியுடன் 26-வது இடத்திலும், விக்ரம் ரூ.26 கோடியுடன் 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா மற்றும்  விஜய் சேதுபதி தலா ரூ.23.67 கோடி சம்பளத்தை ஈட்டி 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நயன்,தனுஷ்,விஜய் சேதுபதி ஆகியோர் கூட இடம்பெற்றுள்ள பட்டியலில் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் அஜீத் பெயர் பட்டியலில் இல்லாதது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.