நேற்று உலகம் முழுவதும் சுமார் 10000  தியேட்டரில் பிரமாண்டமாக வெளியான ரஜினி ஷங்கர் கூட்டணியில் உருவான ஹாலிவுட்டை மிரட்டவைக்கும் பழங்காலத்து விட்டலாச்சார்யா படம் தான். பேய் படமா இல்ல சயின்ஸ் பிக்ஷன் படமா என ஒரு நிமிஷம் தலை சுற்றவைக்கும் சப்ஜெக்ட் தான் இது. சரி அது இருக்கட்டும் கோடிகளை கொட்டி எடுத்த இந்த படம் வெளியாவதற்கு முன்பே அவ்வளவு கொட்டுச்சி, இவ்வளவு அள்ளுச்சு என செய்திகள் வந்தாலும் பெரும்பாலான திரையரங்கம் ஈ ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

எந்தப் பெரிய படம் வந்தாலும் வரலாறு காணாத ஹிட், பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று அவிழ்த்து விட வேண்டியது. ஒரு மாதம் கழித்து நஷ்ட்டம். படம் ஓடவில்லை என்று மூக்கால் அழுவது . . . . இது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. 2.0 க்கு இரண்டாவது நாளே இந்த முணுமுணுப்பு தொடங்கிவிட்டது.

600 கோடி ரூபாயை எடுக்க வேண்டுமானால் 6 கோடிப் பேர் 100 ரூபாய் கொடுக்க வேண்டும். மற்ற வருமானம் எல்லாம் லாபம் என்று வைத்துக் கொள்ளலாம். இது சாத்தியமா? எதற்கு இத்தனை செலவு? அப்படி என்ன கல்ட் பில்ம் . . . .

முன்பு ஜீன்ஸ் படம் வந்த போது புதிய ஜனநாயகத்தில் ஒரு கமெண்ட் அடித்திருந்தார்கள். அது இன்றைக்கும் பொருந்துகிறது.

“கோடம்பாக்கம் கொழுப்பு”

மாபூமி என்றொரு அற்புதமான தெலுங்குப் படம். தெலங்கானா புரட்சியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. கௌதம் கோஷ் இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தயாரித்த தோழர் நரசிங்க ராவ் ஒரு ஜமீன் குடும்பத்தைத் சேர்ந்தவர். தன் பங்குக்கு வந்த சொத்துக்களை எல்லாம் இந்தப் படத்தில் இழந்தார் என்பார்கள்.

தெலங்கானாவில் பேசப்பட்ட தெலுங்கு ஆந்திர சினிமாவில் புறக்கணிக்கப்பட்டு வந்தது. அந்த வட்டார வழக்கையும் விவசாயிகளின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் முதல் முதலாகப் பேசியதற்காகக் கொண்டாடப்படும் படம் மாபூமி.

போண்டியானாலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டாமா? இப்படியான விமர்சனம் இன்டர்நெட்டில் ரவுண்டடிக்கிறது.