ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பிறகு முதன்முறையாக, இயக்குநர் ஷங்கரின் படங்களில் முதல்முறையாக ‘2.0’ படம் வெளியான இரண்டாவது நாளிலேயே பல தியேட்டர்கள் காலியாகக் கிடக்கின்றன என்கிற அதிர்ச்சி செய்தி திரையுலகையே பெரும் திகைப்புள்ளாக்கியிருக்கிறது. இனி ‘2.0’ன்னு சொல்றதுக்கு பதிலா 0.2ன்னு சொல்லலாம்பா என்று ரஜினியின் எதிர்முகாம் நக்கல் அடிக்கும் அளவுக்கு பரிதாப தோல்வியை சந்தித்திருக்கிறது எந்திரனின் இரண்டாம் பாகம்.

படம் ரிலீஸாவதற்கு முன்பு பெரிதும் ஊதிப்பெருக்கப்பட்ட நிலையில் ‘2.0’ படம் பொதுவானவர்களை திருப்திப்படுத்தவில்லை. ரஜினி ரசிகர்களும் கூட பாதி மன்நிலையிலேயே படத்தை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுக்கவே 90 சதவிகித தியேட்டர்கள் இன்று ஹவுஸ்ஃபுல் ஆகாமல் மிகக் குறைவான கூட்டத்தோடே காணப்பட்டன. சில தியேட்டர்களில் 3டி கண்ணாடிக்காக வசூலிக்கப்படும் எக்ஸ்ட்ரா தொகைகளும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இன்று ஆன்லைனில் புக் செய்ய முயன்ற பலருக்கும் எல்லா தியேட்டர்களிலுமே டிக்கட் மானாவாரியாக புக் ஆகாமல் இருப்பது கண்டு பேரதிர்ச்சி. இதே நிலையே திருச்சி, மதுரை, கோவை உட்பட தமிழகத்தின் அத்தனை நகரங்களிலும் நீடிக்கிறது.

இந்தியா முழுக்கவே முதல்நாள் வசூல் ரூ.70 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 கோடியைத் தாண்டியிருக்குமா என்பதே சந்தேகமே என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம். தற்போது படத்தின் ரிப்போர்ட் மிகவும் தவறாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்து மொத்தமே 150 கோடி வசூலானாலே அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், லைகா நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்குமாக சேர்த்து ரூ.200 கோடி வரை திரும்பச் செலுத்தவேண்டியிருக்குமாம்.