‘இந்தியன்’ போன்ற அழுத்தமான கதை உள்ள படங்களில் கூட 5 பாடல்களும் ஏழெட்டு காமெடி காட்சிகளும் வைக்கக்கூடிய ஷங்கர் முதல்முறையாக நகைச்சுவை நடிகர்களோ நகைச்சுவை காட்சிகளோ இல்லாமல் ‘2.0’வை இயக்கியிருக்கிறார்.

‘ஜென்டில் மேன்’ துவங்கி ‘எந்திரன்’ வரை ஷங்கரின் படங்களில் குறைந்தது ஐந்து பாடல்களாவது இடம்பெற்றிருக்கும். ஆனால் ‘2.0’வில் வழக்கம்போல் ரகுமான் இருந்தும் ஆடியோவில் ஐந்து பாடல்கள் இருந்தும் ரஜினியை  பாடல்களில் குறிப்பாக டூயட் பாடல்களில் ரசிக்க மாட்டார்கள் என்று பயந்தோ என்னவோ ஒரு பாடல் கூட இடம்பெறவில்லை. படத்தில் இடம்பெற்ற ஒரு குட்டிப்பாடல் கூட அக்‌ஷய்குமாருக்கானதுதான். 

இதேபோல் இன்னொரு ஆச்சரியமாக முதல்முறையாக ஷங்கர் படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்றுகூட இல்லாத படமும் இது. கவுண்டமணியின் தீவிர ரசிகரான ஷங்கர் அதிகபட்சமாக ‘இந்தியன்’ வரை கவுண்டமணியைப் பயன்படுத்திவிட்டு, அடுத்தடுத்த படங்களில் கலாபவன் மணி, கருணாஸ், சந்தானம் ஆகியோரைப் பயன்படுத்திவந்தார். இப்படத்தில் ஒரு குட்டிக் கதாபாத்திரத்தில் மயில்சாமி இருந்தார். ஆனால் அவர் கைவசம் காமெடி எதுவும் இல்லாமல் சும்மாவே வந்துவிட்டுப்போனார். 

படத்தின் இன்னொரு இல்லை சமாச்சாரம் ஐஸ்வர்யா ராய். ‘எந்திரன்’ நாயகி என்பதால் சும்மா தொட்டகுறை, தொடாதகுறையாக ஒன்றிரண்டு காட்சிகளிலாவது தோன்றுவார் என்று படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே கிசுகிசுக்கப்பட்டார். ஷங்கரும் சும்மா ஒரு வெளம்பரமா இருக்கட்டுமே என்று அதை ஒருநாளும் மறுத்ததில்லை. ஆனால் படத்தில் அவருடன் ரஜினி பேசுவதாக இரண்டு போன் காட்சிகள் வருகிறதே ஒழிய அவருடைய போட்டோ கூட படத்தில் இடம்பெறவில்லை.