பல விஷயங்களை ஓப்பனாக உடைச்சே சொல்லலாம்! ஆனா சில ரகசியங்களை ஒளிச்சு வெச்சுதான் பேசியாகணும். நாம பார்க்கப்போற இந்த விஷயம் செகண்ட் கேட்டகரி. 

சமீபத்தில் திரைக்கு வந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் அது. டெக்னிக்கலா ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிதான் ரிலீஸ் பண்ணினாங்க. ‘ஒரு வாரத்துக்கு ஆன்லைன் புக்கிங் கதறும் பாருங்க. அப்புறம் நார்மல் டிக்கெட்டிங்கே நாலு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லாய் ஓடும்.’ என்று ஏக பில்ட் அப்களை அள்ளி வீசியது இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு.  

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன், ப்ரொடக்‌ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்  என மூன்று நிலைகளுக்கும் பல கோடிகளை அள்ளி வீசியிருந்ததுன் தயாரிப்பு தரப்பு. ஆண் நடிகர்கள் இருவருக்கும், இயக்குநருக்கும் கொடுக்கப்பட்ட சம்பளத்தின் கூட்டு தொகையிலேயே மூன்று மெகா பட்ஜெட் படங்களை இயக்கிடலாம்! என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது போக கிராபிக்ஸ் கிச்சு கிச்சு வேலைகளுக்காக மட்டும் கரைந்த பணத்தை வெச்சு டெல்டாவில் ரெண்டு கிராமங்களை முழுசாம் மீட்டெடுத்து, ஹைடெக்காக உருவாக்கிடலாமாம். அந்தளவுக்கு கரைச்சு  ஊத்தியிருக்காங்க பணத்தை. உணவு உபசரிப்பில் துவங்கி உலகளாவிய விளம்பரம் வரை ஒட்டுமொத்தமா  படத்தின் பட்ஜெட் ஐநூற்று நாற்பத்து மூன்று கோடின்னு தகவல்.

  

படத்தின் ரஷ் பார்த்துட்டு ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ, தயாரிப்பாளர் எல்லாரும் இயக்குநரை பெருமையுடன் திரும்பிப் பார்க்க, அவரோ ‘முதல் நாலு நாட்கள்ளேயே போட்ட பட்ஜெட் கைக்கு வந்துடும். அடுத்த ஒரு வாரத்தில் இரு நூறு கோடிக்கு மேலே லாபம் ஈட்டுவோம். ஒட்டு மொத்தமா பார்த்தால் லாபம் மட்டுமே முதலீடு தொகையை தொட்டாலும் ஆச்சரியமில்லை.’ எனும் ரேஞ்சுக்கு கெத்து பில்ட் - அப் கொடுத்தாராம். தயாரிப்பு தரப்போ குஷியில் நாலு நாளைக்கு ரவுண்டு ரவுண்டாய் உள்ளே தள்ளி சந்தோஷப்பட்டதாம். 

படம் ரிலீஸாச்சு. கதை, கிதை, சதையெல்லாம் பற்றி கேட்காதீங்க! டெக்னிக்கலா உலகத்துக்கே பாடம் சொல்லியிருக்குது தமிழ் சினிமா! என்று விமர்சனங்கள் வந்து விழுந்தன.  சர்வதேசமெங்கும் கொண்டாடப்பட்டது அந்த சினிமா. இந்த தகவல்கள் அப்படியே தயாரிப்பாளரின் காதுகளுக்கு போயின. அவரோ ‘பெருமை பேசுறதெல்லாம் கிடக்கட்டும். வசூல் என்னாச்சு?’ என்றாராம். அங்கேதான் ஆரம்பிச்சது சிக்கல். காரணம்,  எதிர்பார்க்கப்பட்ட ஓப்பனிங் வசூலில் பாதியைக் கூட தொடவில்லை! என்கிறார்கள். தயாரிப்பாளருக்கு நெஞ்சு அடைத்துவிட்டது. இயக்குநரோ ‘ஒண்ணும் வொர்ரி பண்ணாதீங்க. இன்னும் மூணு நாள்ள மேஜிக்கலா இருக்கும் பாருங்க வசூல்’ என்று தேற்ற, ஏதோ அதை நம்பி கிராண்ட் பார்ட்டி ஒன்றை படக்குழுவுக்கு ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர். அந்த ஒரு இரவுக்கு செலவான தொகையை கேட்டாலே உங்களுக்கு தலை சுற்றிவிடும். 

அடுத்தடுத்த நாட்கள் படத்தின் கலெக்‌ஷன் ரிப்போர்ட் தயாரிப்பாளருக்கு போனது. ம்ஹூம் மனுஷனுக்கு மகிழ்ச்சி கிட்டவில்லை. ரிலீஸாகி எட்டு நாட்களாகியும். படத்தின் பட்ஜெட்டுக்கும் பல கோடிகளுக்கும் கீழே இருந்திருக்கிறது வசூல். அவர் இயக்குநருக்கு போன் போட, ‘அவசரப்படாதீங்க. ஒரே வாரத்துக்குள்ளேயே போட்ட பட்ஜெட்டை கலெக்‌ஷன் நெருங்குறது அதிசயம். வெயிட் ப்ளீஸ்.’ என்றிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரோ ‘நோ நோ ஜி. இந்தப் படம் எனக்கு நஷ்டமாகும்னு நான் சொல்லலை. போட்டது ஐநூற்று நாற்பத்து மூணு, ஐநூற்று நாற்பத்து நாலு கிடைச்சாலும் ஒரு கோடி லாபம்தான் எனக்கு. ஆனால் எனக்கு அவ்வளவு மோசமான லாபம் தேவையில்லை. நீங்க சொன்ன மாதிரி போட்டதை விட டபுள் லாபம் கிடைக்கணும். அப்போதான் எனக்கு இண்டர்நேஷனல் லெவலில் மரியாதை. எண்ணூறு கோடியே வசூலானாலும் என்னைப் பொறுத்தவரை அது நஷ்டமே. 

உங்க மேல இருக்கும் நம்பிக்கை பொய்யாகிடுச்சுன்னு அர்த்தம்.” என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டாராம். இயக்குநர் இதை அப்படியே மெயின் ஹீரோவுக்கு கொண்டு போக, அவரோ ’ஏன் ஏன் ஏன்? இப்படி வசூல் டல்?’ என்று கேட்க, “சார் உங்களுக்கே தெரியும் படத்தோட விளம்பரத்துல ரொம்பவே கையை சுருக்கிட்டார் . அதோட விளைவுதான் இது. நிச்சயமா போட்டதை விட பல கோடிகள் லாபம் அள்ளும். ஆனால் டபுளாகணும்னு அடம்பிடிச்சால் எப்படி? நாம ரிலீஸாகியிருக்கிற நேரம் கஜா புயல் பிரச்னை. ஆக கிட்டத்தட்ட எட்டு பத்து மாவட்ட மக்கள்  தியேட்டருக்கு வரவே தயாரில்லை. சோற்றுக்கே கை ஏந்துறப்ப, சினிமா பார்க்கிறது எப்படி? ஸ்கூல்களில் அரைவருட பரீட்சை துவங்கபோகுது, மழை அதுயிதுன்னு ஆகிடுச்சு. 

இது போக நம்ம படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ளேயே உங்களோட அடுத்த படத்துக்கான ப்ரமோஷனை தெறிக்க விடுது தயாரிப்பாளர் தரப்பு. இந்த தயாரிப்பாளர் மேலே இருக்கிற பொறாமையை விளம்பரத்துல காட்டி, நம்ம படத்தை டல்லடிக்க வைக்கிறார் உங்களோட தயாரிப்பாளர்.” என்று நீட்டிக் கொண்டு போக.... “வெயிட் வெயிட் வெயிட். நான் உங்களை அகெயின் கூப்பிடுறேன்” என்று கட் செய்துவிட்டாராம் மாஸ் ஹீரோ. 

முழு இடியும் தன் தலையில் இறங்கியதால் நொந்து உட்கார்ந்த இயக்குநருக்கு போன் போட தயாரிப்பாளர்...”பாகுபலி 2 படத்தை வெறும் 250 கோடியில எடுத்தாங்க. ஏப்ரல் 2017ல் ரிலீஸான படம் இந்த நவம்பர் வரைக்கும் ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் வசூல் பண்ணி கொடுத்திருக்குது. அதைவிட டபுள் மடங்குக்கும் அதிகமான பட்ஜெட் நம்ம படம். அதனால லாபமும் அதைவிட டபுளா இருக்கணும். கீப் இட் இன் யுவர் மைண்ட்.” என்றாராம்.

 

கடுப்பேறிப்போன இயக்குநர் ஒரு கட்டத்தில் தன் காஸ்ட்லி காரை எடுத்துக் கொண்டு இயக்குநரை சந்திக்க சென்றிருக்கிறார். ஆனால் அவரோ ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு அடைந்தே கிடக்கிறாராம். தெளிய தெளிய மீண்டும் மீண்டும் தீர்த்தம் எடுத்துக் கொண்டே இருக்கிறாராம். மனைவி, குடும்பம் எல்லாம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தலைசுற்றலிலேயெ இருக்கிறாராம். வாயை திறந்தாலே ‘ரெண்டே வருஷத்துல நாலாயிரம் கோடி வசூலாகணும் என் படம். இல்லேன்னா நான் கேவலம்.’ என்று புலம்புகிறாராம். எப்போது தெளியுமோ?