பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகைக்கு சுமார் 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கேட்பவர்களை அப்படியா என மலைக்க வைத்துள்ளது. 

தமிழில், விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்,  சீசன் ஒன்று,  சீசன் இரண்டு முடிந்து மூன்றாவது சீசனும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. 100 நாட்களுக்கு டீவி, கைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்புச் சாதனங்களும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்கியிருக்க வேண்டும் என்பது தான் இந்த கேமின் சுவாரஸ்யம்.  அந்த வகையில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா ஆகியோர் பிக்பாஸ் பட்டத்தை வென்றுள்ளனர். இன்னும் ஒரு சில தினங்களில் நூறாவது நாளை எட்டிப்பிடிக்க உள்ள மூன்றாவது சீசனில், பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

போட்டியில் பட்டம் வெல்பவர்களுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது போட்டியாளர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந் நிலையில் நடிகர் கவின் 5 லட்சம் ரூபாயுடன் போட்டியிலிருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக போட்டியிலுருந்து வெளியேறிய மதுமிதா தனக்கான ஊதிய விவரங்களை முறையாக தெரிவிக்கவில்லை என்று புகார் கூறி இருந்தார் இது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது தனிக் கதை.  தமிழ் பிக்பாஸ் இப்படி இருக்க இந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியோ ஏகத்திற்கும் கலைகட்டிவருகிறது.

 

கடந்த சனிக்கிழமை சல்மான்கான் 13 வது சீசனை அறிமுகப்படுத்தினார். இந் நிகழ்ச்சி செப்டம்பர் 29ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது, அதில் போட்டியாளராக கலந்துகொள்ளும் பிரபலங்களை கோடிகளில் சம்பளம் கொடுத்து நிகழ்ச்சியில் பங்குபெற வைக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பிரபல நடிகை ரஷாமி தேசாய் அவர்களை அவரது காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து போட்டியில் பங்குபெற வைப்பதற்கான முயற்ச்சியில் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்காக அவருக்கு 120 கோடி ரூபாய்வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொகை போட்டியின் பரிசுத் தொகையைவிட பன் மடங்கு அதிகம் என்பது குறிப்பிடதக்கது.