UPI பரிமாற்றத்தில் தவறு நடந்துவிட்டால், பணத்தை மீட்பதற்கான வழிகள் உள்ளன. செயலி, வங்கி, NPCI மற்றும் RBI ஆகியவற்றின் மூலம் புகார் அளித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.
பெட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை எல்லா இடங்களிலும் தற்போது UPI பரிமாற்றமே மேற்கொள்ளப்படுகிறது. போன் மட்டும் கையில் இருந்தால் போதும் உலகையே விலைபேசி வாங்கி விடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய டிஜிட்டெல் உலகம். தற்போதைய டிஜிட்டல் உலகில், UPI என்பது மிக விரைவான மற்றும் எளிய பணப்பரிமாற்ற முறையாக வளர்ந்துள்ளது. ஆனால் சில நேரங்களில், யாராவது தவறாக பணம் அனுப்பிவிட்டால், அந்த நிலைமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும். ஆனால் கவலைப்பட தேவையில்லை – உங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிகள் உள்ளன.அதுவும் எளிதாகவும் வேகமாகவும் பெற்றுவிடலாம்.
UPI என்றால் என்ன? எப்படி பணம் அனுப்பலாம்?
Unified Payments Interface (UPI) என்பது இந்தியாவின் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கிய ஒரு ரியல்-டைம் பில்கள் செலுத்தும் அமைப்பாகும். இது வங்கி கணக்குகளுக்கு இடையே பணம் பரிமாறும் செயல்முறையை மிக எளிமையாக மாற்றியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் யுபிஐ முறையில் பணம் செலுத்திவிடலாம். UPI மூலம் பணம் அனுப்ப வங்கிக் கணக்கு எண் தேவையில்லை, Google Pay, PhonePe போன்ற செயலிகளால் எளிதாக பணம் அனுப்பலாம். QR குறியீடுகள், மொபைல் எண்கள், மற்றும் வங்கி UPI ID மூலம் பரிமாற்றம் செய்யலாம்
தவறாக பணம் அனுப்பிவிட்டால் முதலில் செய்யவேண்டியது
யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போது, தவறாக வேறு நபருக்கு அனுப்பிவிட்டால் உடனே பதட்டம் அடைய தேவையில்லை. உங்கள் பணம் தவறான நபருக்கு சென்றுவிட்டது என்று நீங்கள் உணரும் அந்த நிமிடத்தில் செய்யவேண்டியது, இதுதான்.
- UPI பரிவர்த்தனை விவரங்களை (Transaction ID, தேதி, நேரம், UPI ID, தொகை) பதிவு செய்துகொள்ளுங்கள்.
- உடனடியாக உங்கள் UPI செயலியில் இருந்து “Help” அல்லது “Report a Problem” தேர்வை பயன்படுத்தி புகார் அளியுங்கள்.
UPI செயலியில் புகார் அளிக்கவும்
பீம், Google Pay, Paytm, PhonePe போன்ற செயலிகளில் தவறான பரிமாற்றத்திற்குப் பின்வரும் முறையில் புகார் அளிக்கலாம்:
- செயலியில் உள்நுழையவும்
- Transaction History-க்கு செல்லவும்
- தவறான பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்கவும்
- “Raise Dispute” அல்லது “Report Issue” என்பதை அழுத்தவும்
- "Wrongly Transferred to Another Person" என்ற விருப்பத்தை தேர்வு செய்து விபரங்களை அளிக்கவும்
இதையும் செய்யலாம்
மீறி சென்ற UPI ID யாருடையது என்று தெரிந்தால், நேரடியாக அவரை தொடர்புகொண்டு பணத்தை திரும்பக் கோருங்கள். அவர்களது ஒத்துழைப்பு இருந்தால், இது மிக வேகமாக தீர்ந்துவிடும். அல்லது உங்கள் வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணை அழைத்து, தவறான பரிவர்த்தனை குறித்து தகவல் அளிக்கவும். அவ்வப்போது வங்கியின் உதவியுடன் பணத்தை மீட்கும் வாய்ப்பு உள்ளது.மேலும்,NPCI-யை தொடர்பு கொள்ளுங்கள், அதாவது வங்கி அல்லது செயலி மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால், NPCI (National Payments Corporation of India) உடன் முறையாக புகார் அளிக்கலாம்.
இணையதள முகவரி:
https://www.npci.org.in/what-we-do/upi/dispute-redressal-mechanism
இங்கே உங்கள் பரிவர்த்தனை விவரங்களை வைத்து புகார் பதிவு செய்யலாம்.
RBI-யின் Ombudsman சேவையை பயன்படுத்துங்கள்
முன்னதாக கூறிய அனைத்தும் முயற்சி செய்த பிறகும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால், RBI Ombudsman உடன் அதிகாரப்பூர்வமான முறையில் புகார் அளிக்கலாம்: இணையதளம்:https://cms.rbi.org.in.இங்கே உங்கள் விவரங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான ஆதாரங்களுடன் (Screenshot, Reference ID) சேர்க்க வேண்டும்.
நீங்கள் ஒரு செல்லுபடியான வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி விட்டால், அந்த நபரின் ஒத்துழைப்பு இருந்தால் பணம் விரைவில் திரும்பும்.பணம் ஏற்கனவே வெளியேறி விட்டாலும், UPI விதிமுறைகள் மற்றும் வங்கி ஒழுங்குகளின் கீழ் உங்களுக்காக உதவிகள் உள்ளன. இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க PIN யாருடனும் பகிர வேண்டாம்.பரிவர்த்தனை செய்வதற்கு முன் UPI ID சரியாக உள்ளதா என இருமுறை சரிபார்க்கவும்.தவறாக பணம் அனுப்பிவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்கவும்; காலதாமதம் குறைவான வாய்ப்புகளை உண்டாக்கும். UPI பரிமாற்றங்களில் ஏற்படும் தவறுகள் பொதுவானவை தான். ஆனால், அதற்கான தீர்வுகள் எளிதாகவும், செயல்படக்கூடியவையாகவும் உள்ளன. சரியான முறையை பின்பற்றி, அதிகாரப்பூர்வ வழிகளில் புகார் அளித்தால், உங்கள் பணத்தை திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறது.
