share market today : சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணிகளால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதனால் தொடர்ந்து 2-வது நாளாக சரிவுடன் வர்த்தகம் முடிந்தது.

சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணிகளால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதனால் தொடர்ந்து 2-வது நாளாக சரிவுடன் வர்த்தகம் முடிந்தது. 

சர்வதேச காரணிகள்

அமெரிக்காவில் பெடரல் வங்கிவட்டி வீதத்தை உயர்த்தும் என்ற அச்சம், சீனாவில் கொரோனா பரவலால் அங்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் உலகளவில் வரக்கூடுமோ என அஞ்சுகிறார்கள். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் அடுத்துவரும் நாட்களில் தீவிரமடையலாம் என்று கூறப்படுவதும் முதலீட்டாளர்கள் உற்று நோக்கி வருகிறார்கள்.

முதலீட்டாளர்கள் எச்சரிக்கை

அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக் சரிவுடன் முடிந்ததையடுத்து, அதன் எதிரொலி ஐரோப்பிய, ஆசியப் பங்குச்சந்தையிலும் பிரதிபலித்து. ஐரோப்பிய பங்குச்சந்தை கடந்த ஒருவாரத்தில் இல்லாத அளவு சரிவுடன் முடிந்தது. ஆசியப்பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வரவில்லை. 

குறிப்பாக இதனால் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் லாபமீட்டும் நோக்கத்தில் பங்குகளை விற்றனர், மாறாக முதலீடு செய்வதில் ஆர்வம்காட்டவில்லை. இதனால், காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 419 புள்ளிகள் குறைந்து, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 123 புள்ளிகள் சரிந்தன. 

டாப்-10

ஆனால், பிற்பகலுக்குப்பின் பங்குச்சந்தையில் வங்கித்துறைப் பங்குகள் ஓரளவு வாங்கப்பட்டதால் சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. டிசிஎஸ் பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன. கடந்த இரு நாட்களில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்ததையடுத்து, மதிப்புமிக்க டாப்10 நிறுவனங்கள் பட்டியலில் கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் இணைந்தன.

சரிவு தொடர்ந்தது

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 388 புள்ளிகள் சரிந்து, 58,576 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசியப் பங்குசந்தையில் நிப்டி 144 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17,530 புள்ளிகளில் முடிந்தது. பங்குச்சந்தையில் இன்றஉ 1146 பங்குகள் லாபமீட்டன, 2193 பங்குகள் மதிப்பு சரிந்தன, 90 பங்குகளின் மதிப்பு சீராக இருந்தது

பாதிக்கு பாதி

30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச்சந்தையில், 15 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் 15 பங்குகள் இழப்பிலும் முடிந்தன. ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பவர்கிரிட், ஹெச்டிஎப்சி, டைட்டன், இன்டஸ்இன்ட் வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, ஹெச்டிஎப்சி வங்கி, நெஸ்ட்லே, டாக்டர்ரெட்டிஸ் ஆகிய பங்குகள் லாபமடைந்தன.

சன்பார்மா, ஐடிசி, ஏசியன்பெயின்ட், பஜாஜ்பைனான்ஸ், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், விப்ரோ, டெக்மகிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன

வங்கித்துறை லாபம்

நிப்டியில் தகவல்தொழில்நுட்பம், உலோகம், ரியல்எஸ்டேட்,எண்ணெய் மற்றும் எரிவாயு , முதலீட்டுப் பொருட்கள் ஆகிய துறைகள் பங்குகள் சரிந்தன. வங்கித்துறை பங்குகள் மட்டும் லாபமீட்டன

நிப்டியில், ஹின்டால்கோ, கோல் இந்தியா, கிராஸிம், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன. ஆக்சிஸ் வங்கி, கோடக்மகிந்திரா வங்கி, பவர்கிரிட், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் , மாருதி சுஸூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள்லாபமீட்டன