பணவீக்கம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் இரண்டாம் நிலை நகரங்களில் வீடு விற்பனை சரிந்துள்ளது. சிறிய வீடுகளின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், கட்டுமான நிறுவனங்கள் இதை மறுக்கின்றன.
பணவீக்கம் உயர்வு, மணல், ஜல்லி, செங்கல் மற்றும் கம்பி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இரண்டாம் தர நகரங்களில் வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வு காரணமாக வீட்டின் விலை 6 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சிறு இடத்தை வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடிபுகுவதே புதிதாக வேலைக்கு போகும் பெரும்பாலான இளைஞர்களின் இலக்காகவே உள்ளது. தனிவீடு அல்லது குடியிருப்பில் ஒரு பிளாட் என ஏதோ ஒன்றை தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்யும் இளைஞர்கள் அதில் தனது குடியேறி ஆனந்தம் அடைகின்றனர்.
இரண்டாம் கட்ட நகரங்கள்
இந்த நிலையில், திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், கரூர், சிவகாசி, திருப்பூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், பாளையங்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இரண்டாம் நகரங்களில் வீடுகள் விற்பனை 40 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிய வீடுகள் கட்டுவதை தவிர்க்கும் கட்டுமான நிறுவனங்கள், 50 லட்சம் ரூபாய்க்கே துவக்க விலையாக கொண்ட வீடுகளை கட்டு விற்பனை செய்வதே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை எப்படி இருக்கு?
தங்களது பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போன்ற சிறிய வீடுகள் கிடைக்காததால், பலரும் வீடு வாங்குவதை ஒத்திப்போட்டுள்ளதாகவும், இதனால் தென் இந்திய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இரண்டாம் தர நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த காலாண்டை விட சராசரியாக 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவலை மறுத்த கட்டுமான சங்கங்கள், சிறிய பில்டர்கள் குறைந்த விலை வீடுகளை கட்டி வருவதாகவும், மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக அவற்றின் விலை கொஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. மேலும் வீடுகள் விற்பனை பெரிய வளர்ச்சி இல்லை என்றாலும் சரிவு என கூறிவிட முடியாது எனவும் கட்டுமான சங்கங்கள் தெரிவித்துள்ளன.
காரணம் இதுதான்… அப்ப சரிதான்!
நிலத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதே வீட்டின் விலை உயர்வுக்கு காரணமாக கூறும் ரியல்எஸ்டேட் தரப்பினர், ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டு இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். ஆனால், எல்லா நகரங்களும் வளர்ச்சி அடைந்து வருவதால் பெரிய கட்டுமான நிறுவனங்கள் அதிக முதலீடு செய்து, பெரிய வீடுகளை கட்டி வருவதாகவும், பெரும்பாலான நிறுவனங்கள் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீடுகளையே கட்டுவதில்லை என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கிள் பெட்ரூம் வீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் இரண்டாம் தர நகரங்களில் வீடுகள் விற்பனை எப்போதும் போல் வளர்ச்சி அடையும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
