மும்பை வோர்லி பகுதியில் 639 கோடி ரூபாய் மதிப்புள்ள இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை யுஎஸ்வி லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி வாங்கியுள்ளார். 22,572 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை 2.83 லட்சம் ரூபாய்.

மஹாராஸ்டிரா மாநிலம் மும்பையில், 639 கோடி மதிப்பிலான குடியிருப்பை வாங்கிய பெருமையை பெற்றுள்ளார் பெண் தொழிலதிபரான லீனா காந்தி திவாரி. முன்னணி மருந்து நிறுவனமான யுஎஸ்வி லிமிடெட்டின் தலைவரான லீனா காந்தி திவாரி, மும்பை வோர்லி பகுதியில் கடலை நோக்கி கட்டப்பட்டுள்ள இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை 639 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். முத்திரை வரி உள்ளிட்டவைகளுடன் சேர்த்து, குடியிருப்பின் மொத்த மதிப்பு 700 கோடி ரூபாயாகும்.

காஸ்ட்லியான மும்பை ஏரியா

இந்தியாவில் ரியல்எஸ்டேட் துறை முழு வளர்ச்சியை எட்டியுள்ள நகரம் மும்பை. அங்கு சொந்த வீடு வைத்திருந்தால் கோடீஸ்வரன் என நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம். அந்த அளவுக்கு அங்கு மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

விலை உயர்ந்தசொகுசு குடியிருப்பு

தற்போது மும்பையில் 40 மாடிகள் கொண்ட கட்டடத்தில் 4 மாடிகள் ரூ.639 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. ஒர்லி கடற்கரையையொட்டி நமன் சானா என்ற பெயரில் 40 மாடி கொண்ட சொகுசு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் 32வது மாடியில் இருந்து 35வது மாடி வரை நான்கு மாடிகளை தொழிலதிபர் லீனா காந்தி திவாரி என்பவர் வாங்கி இருக்கிறார். இந்த வீடுகள் இரட்டை மாடிகளாகும். இது மொத்தம் 22,572 சதுர அடி பரப்பளவாகும்.

அந்த அரபிக்கடலோரம் அழகான மாளிகை

அந்த அரபிக்கடலோரம் இருக்கும் இக்கட்டத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த வீடுகளுக்காக தொழிலதிபர் திவாரி மொத்தம் ரூ.703 கோடி செலவு செய்திருக்கிறார். இதில் வீட்டு விலை மட்டும் ரூ.639 கோடியாகும். பதிவு மற்றும் முத்திரை கட்டணம் 63.9 கோடியாகும். ஒரு சதுர அடி 2.83 லட்சம் ரூபாயிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனையான வீடுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வீட்டை வாங்கி இருக்கும் லீனா காந்தி திவாரி யு.எஸ்.வி மருந்து கம்பெனியின் தலைவர் ஆவார். இந்த அளவுக்கு அதிக விலையில் வீடுகள் வாங்கியது குறித்து லீனா காந்தி திவாரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

தெற்கு மும்பையில் குவியும் பிரபலங்கள்

இதற்கு முன்பு இதே ஒர்லி பகுதியில் கடற்கரையையொட்டி கோடக் மகேந்திரா வங்கியை சேர்ந்த உதய் கோடக் அடுக்கு மாடி கட்டடத்தில் 8 வீடுகளை ரூ.400 கோடி கொடுத்து வாங்கினார். ஒரு சதுர அடி ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையானது. தெற்கு மும்பையில் வீட்டு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தாலும் தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தொடர்ந்து சொத்துகளில் மீது முதலீடு செய்து கொண்டே இருக்கின்றனர். தெற்குமும்பையில்தான் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் குவியும் கோடீஸ்வரர்கள்

உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குகின்றனர். உலக அளவில் இருக்கும் செல்வந்தர்களில் 3.7 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர், இவர்களில் 85,698 பேர் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் என தெரிய வருகிறது. உயர் சொத்து மதிப்பு கொண்டு தனி நபர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஜப்பானும் இருக்கின்றன.

ஒரு அடி இவ்ளோ ரூபாயா?

பலருக்கு ஆண்டு வருமானமே 3 லட்சம் ரூபாயாக இருக்கும் பட்சத்தில் லீனா காந்தி திவாரி, தான் வாங்கிய குடியிருப்பின் ஒரு சதுரஅடிக்கு 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாமும் தொழிலதிபராகி மும்பையில் வீடு வாங்குவோம்